கொலம்பியாவில் பல்பொருள் அங்காடியில் 25 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்துத் தாக்குதல்தாரிகள் முற்றுகை

கொலம்பியாவின் கரிபியன் கடற்கரைச் சுற்றுலா நகரமான கர்டஜினாவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்குள் புகுந்த ஆயுதமேந்திய தாக்குதல்தாரிகள் 25 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து விசேட அதிரடிப் படையினர், துப்பாக்கிச் சூட்டுக் குழுவினர் , இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து பாரிய பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கவச வாகனம் ஒன்றைக் கொள்ளையடிக்கத் தாக்குதல்தாரிகள் முயற்சித்ததாகவும், பின்னர் தப்பிச் சென்று பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து சுமார் 30 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வயதான பெண்கள் ஐவர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், எஞ்சிய 25 பேர் தொடர்ந்தும் பணயக் கைதிகளாக உள்ளனர் எனவும் கொலம்பிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா தெரிவித்துள்ளார்.

பல்பொருள் அங்காடியை அண்மித்த வீதிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையினால் வருகை தரும் விமான சேவைகள் சிறிது நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கொரில்லா அல்லது துணை இராணுவக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதக் கடத்தல் அல்ல எனத் தெளிவுபடுத்தியுள்ள ஜனாதிபதி எஸ்பிரியெல்லா, தப்பிக்க வழியின்றி மாட்டிக்கொண்ட குற்றவாளிகளே இவ்வாறு செய்துள்ளதாகவும், பணயக் கைதிகளைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts