வீதிகளில் இழக்கப்படும் இளம் உயிர்கள் – இனியாவது விழித்துக்கொள்வோம்!

அண்மைக்காலமாக வடமாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிக கவலையை ஏற்படுத்துகின்றன. தற்கொலைகள் ஒருபுறமும், வீதி விபத்துகள் மறுபுறமும் பல குடும்பங்களிடமிருந்து பெறுமதியான இளம் உயிர்களைப் பறித்துச் செல்கின்றன என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்த வாரம் வீதி விபத்துகளைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

2026 அக்டோபர் மாதத்தில் மட்டும் இணையச் செய்திகள் மற்றும் கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் வடமாகாணத்தில் குறைந்தது 9 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்த சம்பவங்களை அடையாளம் காண முடிகிறது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியத் துறையின் அவதானிப்பின்படி, இளைஞர்கள் சம்பந்தப்பட்ட சில கடுமையான விபத்துகளில் மது அருந்துதல், அதிக வேகம் மற்றும் வீதியை சாகசம் செய்யும் இடமாகக் கருதும் ஆபத்தான மனப்பாங்கு என்பன முக்கியமான பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன.

ஆபத்தான வீதி சாகசங்கள்: விடுமுறை மற்றும் கொண்டாட்டக் காலங்களில் இத்தகைய ஆபத்தான நடத்தைகள் குறித்து அதிக கவனம் தேவை. குறிப்பாக புதிய மோட்டார் சைக்கிள்களை வாங்கும் சில இளைஞர்கள் அவற்றின் வேகம் மற்றும் திறனைச் சோதிக்கும் விதத்தில் வீதிகளில் சாகசம் செய்ய முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது.

சட்ட வைத்திய நிபுணரின் மருத்துவ அனுபவத்தில், இவ்வாறான ஆபத்தான ஓட்டுநர் நடத்தையுடைய சிலர் பின்னர் கடுமையான விபத்துகளுக்கு உள்ளாகி சட்ட வைத்திய உடற்கூற்றுப் பரிசோதனைக்கு வரும் துயரமான நிலையும், அல்லது உயிர் தப்பினாலும் கடுமையான மூளைக் காயங்களுடன் நரம்பியல் சத்திரசிகிச்சைப் பிரிவில் நீண்டகால உடல் மற்றும் நரம்பியல் பாதிப்புகளுடன் சிகிச்சை பெறும் நிலையும் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது ஒரு தனிப்பட்ட அவதானிப்பு மட்டுமல்ல. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 210 வீதி விபத்து மரணங்கள் தொடர்பான முன்னைய ஆய்வில், மோட்டார் சைக்கிள் பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்ட குழுவாக இருந்ததுடன், மதுவின் தாக்கமும் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பான மரணங்களுடன் குறிப்பிடத்தக்க தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டது.

இலங்கை பொலிஸாரும் 2026 ஆம் ஆண்டில் அதிக வேகம், கவனக்குறைவான வாகன ஓட்டுதல் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துதல் ஆகியவற்றை முக்கிய விபத்துக் காரணிகளாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொலிஸார் கண்காணிப்பு, சோதனை மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சட்டம் மட்டும் உயிர்களைக் காப்பாற்ற முடியாது. ஒவ்வொரு வாகன ஓட்டுநரிடமும் பொறுப்புணர்வு உருவாக வேண்டும்.

கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய வீதிப் பாதுகாப்பு விதிகளாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சுட்டிக்காட்டுபவை:

  • வீதி பந்தயத் திடல் அல்ல.

  • வாகனம் ஓட்டும்போது தொலைபேசி பயன்பாடு, Selfie, Video என்பவற்றைத் தவிர்க்கவும்.

  • மது அருந்தியிருந்தால் வாகனத்தைத் தொடவே வேண்டாம்.

  • தரமான தலைக்கவசத்தை (Helmet) முறையாக அணியுங்கள்.

  • தேவையற்ற வேகம் மற்றும் ஆபத்தான முந்தல்களைச் (Overtaking) செய்ய வேண்டாம்.

  • பெற்றோர்களும் குடும்பத்தினரும் இளைஞர்களுடன் வீதிப் பாதுகாப்பைப் பற்றித் தொடர்ந்து பேசுங்கள்.

ஒரு விபத்து ஒரு இளைஞரின் உயிருடன் முடிவதில்லை; பெற்றோரின் கனவுகள், குடும்பத்தின் எதிர்காலம், நண்பர்களின் மகிழ்ச்சி என அனைத்தையும் ஒரே நொடியில் மாற்றிவிடுகிறது.

வேகத்தில் வீரத்தைக் காட்ட வேண்டாம். பாதுகாப்பாக வீடு திரும்புவதில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது. நமது இளைஞர்களைப் பாதுகாப்போம்; நமது வீதிகளைப் பாதுகாப்பானதாக மாற்றுவோம் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தனது முகநூல் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts