திருகோணமலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – இருவர் படுகாயம்

இரண்டாம் இணைப்பு!!

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த நபர் கடற்படைச் சிப்பாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் சாரதியாக இருந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவராவார்.

காயமடைந்த 28 மற்றும் 38 வயதுடைய ஆனந்தகுளம் பகுதியைச் சேர்ந்த இருவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று (02) இரவு வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்த நபர்களை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ரி-56 (T-56) ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறே இந்த துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் திருகோணமலை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னைய செய்தி

திருகோணமலை, சீன துறைமுகப் பகுதிக்குட்பட்ட கப்பல்துறை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றின் மீது நேற்று (02) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களைக் கண்டறிவதற்காகப் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts