செம்மணி மனித எச்சங்கள் தொடர்பாக ஊகங்களை வெளியிட்டு அதனை பூசிமெழுகும் சூழலை உருவாக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்துணிவோடு இந்த விவகாரத்தில் கரிசனை செலுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“செம்மணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் ராஜ் சோமதேவா அவர்களின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக பல்வேறு விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றுள் குறித்த மனித எச்சங்கள் இயற்கை பேரிடர் காரணமாக அல்லது தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டவையாக இருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கருத்தானது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய விடயமாக காணப்படுகிறது. இவ்வாறான கருத்துக்கள் செம்மணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் பற்றிய வீரியத்தினை குறைத்துவிடுமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்துகின்றது.
கடந்த காலங்களிலும் இந்த பல்வேறு இடங்களிலே மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு அவை தொடர்பாக விடயங்கள் பேசுபொருளாக இருந்தபோதிலும் காலவோட்டத்தில் அவை பற்றிய மக்களின் வீரியமான அவதானிப்பு திசை திருப்பப்பட்டு விசாரணைகள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதை அவதானிக்கின்றோம்.
உதாரணமாக, சில வருடங்களுக்கு முன்னர் மன்னார் நகரப் பகுதியிலே சதோச கட்டடத்துக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது, அங்கே மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு அது மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்த நிலையில் அங்கு அகழ்வு ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு பல நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இருந்தாலும் ஒரு கட்டத்தில் குறித்த மனித எச்சங்கள் மன்னர் காலத்துக்குரியவையாக இருக்கலாம். இதனோடு எல்லாள மன்னனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற ஊகம் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், அந்த விவகாரத்தில் மக்களின் அக்கறை குறைவடைய, அதுபற்றிய ஆய்வுகள் ஏறக்குறைய கைவிடப்பட்ட நிலையில் இருப்பதையே அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
அவ்வாறான ஒரு நிலை செம்மணி விவகாரத்திற்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே எங்களுடைய அக்கறையாக இருக்கின்றது. எங்களைப் பொறுத்தவரையில் ஊகத்தின் அடிப்படையில் எந்தவிதமான கருத்துக்களும் வெளிப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
பேராசிரியர் ராஜ் சோமதேவா தரப்பினர் ஊகிப்பது போன்ற வாய்ப்புக்கள் இருந்தாலும் அவை விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளிப்படுத்தப்பட வேண்டும். முதலில் செம்மணியிலே புதைக்கப்பட்ட மனித எச்சங்கள் எந்த காலப் பகுதியில் புதைக்கப்பட்டவை என்ற காலவரையறைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
எங்களைப் பொறுத்தவரையில், 70, 80, 90ஆம் ஆண்டுகளிலே இந்த மண்ணிலே வாழ்ந்த தலைமுறையினர் இந்த மண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்தக் காலப் பகுதியில் இந்த மண்ணில் பாரிய இயற்கை பேரிடர்களோ, நூற்றுக்கணக்கான உயிர்களை பலியெடுத்த தொற்றுநோய்களோ ஏற்பட்டிருக்கவில்லை. அவ்வப்போது செயற்கை பேரிடர்தான் நடைபெற்றிருக்கிறது.
இவர்கள் கூறுவது போல் இயற்கைப் பேரிடர் மற்றும் தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றால், அது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றவையாக இருக்கவேண்டும்.
அவ்வாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தாலும் அங்கு மீட்கப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும், நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்க முடியாது.
கணிசமானவை 90களுக்கு பிற்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டவையாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
96 ஆண்டுகாலப் பகுதியிலே இந்தப் பகுதியில் 850க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கின்றார்கள் என்பதற்கு பதிவுகள் இருக்கின்றன.
அவ்வாறு காணாமல்போனவர்களில் கணிசமானவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல், அவர்களின் உறவுகள் இன்றும் இந்த மண்ணிலே துடித்துக்கொண்டிருக்கின்றார்கள். காணாமல் போனவர்களின் உறவினர்களை ஒரு கட்டமைப்பாக உருவாக்கி, முதன்முதலில் காணாமல்போனோர் சங்கத்தினை உருவாக்கியவர்கள் நாங்கள்.
இந்த அநியாயத்தை பல்வேறு தளங்களிலும் பேசுபொருளாக்கி காணாமற்போதலை கட்டுப்படுத்தியதில் ஈ.பி.டி.பி.க்கு கணிசமான பங்கு இருக்கிறது. அதனை யாரும் மறைக்க முடியாது.
அதேபோன்று கிருஷாந்தி கொலை வழக்கிலே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷவும் இதனை வெளிப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் சில உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அதேவேளை, தற்போது, அரசியல் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்ற சில தரப்புக்கள், இந்த மண்ணிலே காணாமற்போவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக மானசீகமாக உழைத்த எம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிதற்றுகின்ற கேலிக் கூத்துக்களையும் அவதானித்துக்கொண்டிருக்கிறோம்.
இவ்வாறான போக்கிரித்தனங்கள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.
இருண்ட மாளிகை என்றும், பேய்கள் நடமாடித் திரிகின்ற கூடமாகவும், ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கின்ற களஞ்சியமாகவும் ஸ்ரீதர் தியேட்டர் தொடர்பாக கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பங்கள் எவ்வாறு சுக்குநூறாக்கப்பட்டிருக்கின்றனவோ, செம்மணி பற்றிய உண்மைகளும் வெளிக்கொணரப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். அதற்கு செம்மணி பற்றிய விசாரணைகள் சரியான திசையில் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட வேண்டும்.
எனவே செம்மணி பற்றிய விசாரணைகள் பூசி மெழுகுகின்ற சூழல் உருவாகுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.
எனவே, தென்னிலங்கையில் தற்துணிவோடு சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கம் செம்மணி விவகாரத்திலும் விசேட கவனத்தை செலுத்தி உண்மைகள் வெளிவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
யாரையாவது காப்பாற்றவேண்டும், யாரையாவது காட்டிக் கொடுத்த அவப்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் செம்மணி விடயத்தில் நழுவுகின்ற போக்கை கடைபிடிக்காமல் தற்துணிவான அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம் என்றார்.