வடக்கு மாகாணத்திற்கு வடகிழக்கு திசையில் நிலை கொண்டிருந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது இன்று (21) காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளதாகயாழ். பல்கலைக்கழக புவியியல் துறைப் பேராசிரியரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இந்தக் காற்றழுத்த சுழற்சி எதிர்பார்த்த வேகத்தில் நகராமல், மிகக் குறைந்த வேகத்தில் நகர்ந்து தற்பொழுது வடக்கு மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு பகுதியை மையம் கொண்டு காணப்படுகின்றது. ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டதைப் போல இது அரபிக் கடலுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அமைப்பு மேலும் 36 மணித்தியாலங்களுக்கு இதே இடத்தில் நிலைகொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதால், வானிலை ரீதியாக இது ஆபத்தான நிலையாக மாறியுள்ளது. ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ள இந்த சுழற்சி, மறை வெப்ப சக்தியைத் (Latent Heat) தொடர்ந்து உள்வாங்கி வலுவடைந்து வருவதால், மையத்தை நோக்கிய காற்றின் குவிதல் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 23ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், சில இடங்களில் மிகக் கனமழையும் பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடர் மழை காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்குகள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த மழையானது மேற்கண்ட மாகாணங்களுடன் மாத்திரமல்லாமல், மத்திய, வட மத்திய, வடமேல், மேற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் எனத் கணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், எதிர்வரும் அக்டோபர் 23ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதால், மீனவர்கள் எவரும் இக்காலப்பகுதியில் கடலுக்குச் செல்வதைத் முற்றிலுமாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக இந்த வளிமண்டலச் சுழற்சியின் நகர்வையும் அமைவிடத்தையும் துல்லியமாகக் கணிக்க எந்தவொரு வானிலை மாதிரியினாலும் (Weather Models) முடியவில்லையென வானிலை ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாகவே எல் நினோ காலங்களில் இதுபோன்று கணிக்க முடியாத வானிலை மாற்றங்கள் மற்றும் தோற்றப்பாடுகள் ஏற்படுவது வழமையாகும். அந்த வகையில், எல் நினோவின் விசித்திரமான தொழிற்பாடே இந்த மாறுபட்ட மற்றும் சவாலான வானிலை நிலைமைக்குக் காரணம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.