நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு நுளம்புகளின் பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய இடங்களை உடனடியாக அகற்றுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முறையான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மீண்டும் டெங்கு அதி தீவிரப் பெருந்தொற்று நிலைமை ஒன்று உருவாகும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர சுட்டிக்காட்டியுள்ளார்.
மழை காலப்பகுதியுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வரலாற்று ரீதியாகவே அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையைத் தொடர்ந்தும் பேணிச் செல்வதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த தென்மேற்கு பருவமழை காலப்பகுதியில் ஏற்பட்ட அதி ஆபத்தான மற்றும் பெருந்தொற்று நிலைமையை வெற்றிகொள்ள பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்பு பெரிதும் உதவியாக அமைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமை மீண்டும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, அனைவரும் இணைந்து டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை உடனடியாக அகற்றுவதற்குத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, வீடுகள் மற்றும் வளாகங்களில் நீர் தேங்கி நிற்கும் இடங்களைப் பரிசோதித்து அவற்றை அகற்றுவதற்கோ அல்லது நீர் தேங்குவதைத் தடுப்பதற்கோ நடவடிக்கை எடுப்பது மிக அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.