ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது முன்னணி நடிகர்களின் படங்கள் மோதுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் களத்தில் இல்லை. அதனால் போட்டி குறைந்துவிடுமா என்றால், அதுதான் இல்லை.
புதுப்புது கதைகளுடன் நான்கு தமிழ்ப் படங்களும், பிரமாண்ட எதிர்பார்ப்புடன் இந்திப் படமான ‘ராமாயணா’வும் களமிறங்குவதால் தீபாவளி திரை விருந்து சூடுபிடிக்கத் தயாராகிவிட்டது. நட்சத்திரப் பட்டாளம் இல்லாத களம். வசூல் வேட்டைக்குத் தயாராகும் பலம். இந்தப் போட்டியில் முந்தப்போவது யார்? ரசிகர்களின் மனதை வெல்லப்போவது யார்? திரையரங்குகளை நிரப்பப்போவது யார்? என்ற கேள்விகள் வெகுவாக ரசிகர்களின் மனதில் நிற்கின்றன.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 08 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி ரேசில் முக்கியப் போட்டியாளராகக் களமிறங்குகிறார் சூர்யா. மலையாளத்தில் ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ வெற்றிகளுக்கு பிறகு ஹாட்ரிக் வெற்றியை நோக்கி சூர்யா களமிறங்குகிறார்.
இந்தப் போட்டியில் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு படம் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்-2’. முதல் பாகம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படத்தில் பிரமாண்டமான காட்சிகளுக்கும் ஆன்மிக அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
‘ரைஸ் ஆப் மகாசக்தி’ என்ற பெயரில் வெளியான டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளதால், படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
ஆக்ஷன், உணர்ச்சி, குடும்பப் பாசம் ஆகிய அம்சங்ளுடன் களமிறங்குகிறது விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’. மு.மாறன் இயக்கியுள்ள இப்படம், தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கதையுடன் பார்வையாளர்கள் தங்களை இணைத்துக்கொள்ளும் அளவுக்கு உணர்ச்சிகரமான காட்சிகள் அமைந்தால் ‘அப்பா குட்டி’ படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கலாம்.
நடனத்துக்கும், இசைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது பிரபுதேவாவின் ‘மூன் வாக்’. சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு தேவா-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது இப்படத்தின் முக்கிய ஈர்ப்பாகப் பார்க்கப்படுகிறது. மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ளார்.
அந்தவகையில் தமிழில் இந்த படங்களும் தீபாவளி ரேசில் களம் காண்கிறது. அதாவது நவம்பர் 5 மற்றும் 6-ந்தேதிகளில் இந்தப்படங்கள் களமிறங்குகின்றன. தமிழ்ப் படங்களுக்கிடையிலான போட்டி ஒருபுறம் இருக்க, மறுபுறம் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்திப் படமான ‘ராமாயணா’வும் களத்தில் இறங்குகிறது. ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார். 2 பாகங்களாக தயாராகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 05 ஆம் திகதி திரைக்கு வருகிறது.
இந்தத் தீபாவளி ரேசில் வெற்றிக் கொடியை உயர்த்தப் போவது யார்? அதற்கான விடையை ரசிகர்களின் தீர்ப்பும், திரையரங்குகளின் வசூலும் சொல்லப்போகின்றன.