டைகர் ஷெரொஃப் மீதான துப்பாக்கிச்சூடு – வழக்கில் புதிய திருப்பம்

பொலிவூட் நடிகர் டைகர் ஷெரொஃப் வீட்டின் அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறார் என்பது நீதிமன்ற விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவருக்கு எதிரான வழக்கைச் சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையின் ஜுஹு பகுதியில் கடந்த அக்டோபர் 18ஆம் திகதி நடிகர் டைகர் ஷெரொஃப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இதில் காயங்களுடன் அவர் உயிர் தப்பிய நிலையில், அவரது ஓட்டுநர் உள்ளிட்ட மேலும் இருவர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் துப்பாக்கிச்சூடு நடத்திய மூவரை ராஜஸ்தான் காவல்துறையினர் அக்டோபர் 19ஆம் திகதி கோட்டா நகரில் கைது செய்தனர்.

தொடர்ந்து அக்டோபர் 20ஆம் திகதி, இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட மேலும் நான்கு பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இந்த நால்வரும் தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்களைப் பஞ்சாபிலிருந்து கொண்டு வந்து சேர்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, பரோடாவில் கைது செய்யப்பட்ட நபர் இந்தச் சதித்திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கருதப்படுகிறது.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய அனில் பண்டிட், அங்கித் என்பவர் மூலமாகப் பணப் பரிமாற்றம் செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், நேபாளம் வழியாக அனில் பண்டிட்டுடன் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இந்த வழக்கில் புதிய கோணமாக, துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பின்னால் கிரிப்டோகரன்சி மூலம் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தொடர்புடைய நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts