தையிட்டி விகாரை பகுதியில் சட்டவிரோதக் கட்டுமானங்களைப் பார்வையிடச் சென்ற தவிசாளர் மற்றும் உறுப்பினர்களைத் தடுத்த பொலிசார்

தையிட்டி பகுதியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலும் சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விகாரை பகுதிக்கு சென்ற வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

வலி.வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச சபை சபா மண்டபத்தில் தவிசாளர் சோ.கீர்த்தன் தலைமையில் நடைபெற்றது.

அதன் போது, தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலும் சட்டவிரோத கட்டடங்கள் கட்டுவது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

மேலும் விகாரைக்கு அருகில் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது

அதனை தொடர்ந்து கூட்டம் நிறைவுற்ற பின்னர், தவிசாளர் தலைமையில் சபை பெரும்பாலான சபை உறுப்பினர்கள் விகாரை அமைந்துள்ள பகுதிக்கு விஜயம் செய்தனர்.

அதன் போது விகாரையின் வாயிலில் காவல் கடமையில் இருந்த பொலிசார் தவிசாளர் தலைமையில் சென்ற பிரதேச சபை உறுப்பினர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை அதனால், விகாரையில் வெளியே நின்று பிரதேச சபையின் அனுமதிகள் இன்றி சட்டவிரோதமான முறையில் தனியார் காணிகளில் முன்னெடுக்கப்படும் புதிய கட்டுமான பணிகளை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு சென்றனர்.

Related Posts