விளையாட்டு அரங்கிற்காக ஒதுக்கப்பட்ட காணி ஏன் மாற்றப்பட்டது? பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் கேள்வி

யாழ்ப்பாண மாவட்ட விளையாட்டு அரங்கை அமைப்பதற்கு ஏற்கனவே செம்மணி பகுதியில் ஒதுக்கப்பட்ட காணி, பின்னர் எதன் அடிப்படையில் மாற்றப்பட்டது என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு (DCC) கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விளையாட்டு அரங்கை அமைப்பதற்கு பொருத்தமான காணியை ஒதுக்குவது தொடர்பாக, கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தாம் எழுத்துமூலக் கோரிக்கையை முன்வைத்திருந்ததாகக் குறிப்பிட்டார். அன்றைய கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளின் இணக்கப்பாட்டுடன் செம்மணி பகுதியில் விளையாட்டு அரங்கை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான விவரங்கள் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இருப்பினும், பின்னர் அந்த தீர்மானம் மாற்றப்பட்டு, யாழ்ப்பாணம் பூங்கா பகுதியில் விளையாட்டு அரங்கை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அறிய முடிவதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போது அவ்விடம் தொடர்பான விடயம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் சென்றுள்ளதால், விளையாட்டு அரங்கை அமைப்பதில் தடைகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பின்வரும் முக்கிய கேள்விகளை தாம் முன்வைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார்:

  1. செம்மணியில் விளையாட்டு அரங்கை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் பின்னர் எதன் அடிப்படையில் மாற்றப்பட்டது?
  2. அந்த இடமாற்றத்தை மேற்கொள்ள யார் தீர்மானித்தார்கள்? யாருடைய ஒப்புதலுடன் அது முன்னெடுக்கப்பட்டது?
  3. இந்த மாற்றம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டதா? அவ்வாறு அனுமதி பெறப்படவில்லை என்றால், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது?

இக்கேள்விகளுக்குத் தெளிவான பதில்களும், உரிய ஆவணங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், தற்போதைய சூழலில் குறித்த இடத்தில் விளையாட்டு அரங்கை அமைக்க முடியாத நிலை தொடருமானால், ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி சட்டச் சிக்கல்களற்ற பொருத்தமான வேறொரு இடத்தில் விளையாட்டு அரங்கை விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அரச தீர்மானங்கள் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புக்கூறலுடனும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், யாழ்ப்பாண மாவட்ட இளைஞர்களின் எதிர்கால விளையாட்டு வாய்ப்புகளுக்காக இத்திட்டம் தாமதமடையாமல் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Related Posts