நேபாளத்தின் கோர்கா, தாடிங், நுவாகோட் மற்றும் சித்வான்மாவட்டங்கள் மற்றும் புதி கண்டகி நதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் அல்லது அப்பகுதிகளுக்குப் பயணம் செய்யும் அனைத்து இலங்கையர்களும் கடுமையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு நேபாளத்திலுள்ள இலங்கைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

கோர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிளை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, புதி கண்டகி நதிக்கரையோரப் பகுதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இலங்கையர்களுக்காகத் தூதரகம் பல பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. ஆறுகள், ஆற்றங்கரைகள், பாலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறும், உள்ளூர் அதிகாரிகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் சுற்றுலாப் பொலிஸார் வழங்கும் அறிவுறுத்தல்களை அவசியம் பின்பற்றுமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
நிலைமை சீரடையும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இலங்கையர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
பயண முகவர் நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டால், இப்பகுதிகளிலிருப்போர் உடனடியாக உயரமான மற்றும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் மக்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.
உதவி மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக இலங்கைத் தூதரகம் 24 மணி நேரமும் சேவையை முன்னெடுத்துள்ளது.
உதவி தேவைப்படுவோர் தூதரகத்தின் 24 மணி நேர அவசர உதவி தொலைபேசி 10977 985 1048 653 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்