சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து 67 பேர் உயிரிழப்பு!!

ஆபிரிக்க நாடான சூடானின் மேற்கு கோர்டோபான் மாகாணத்தில் உள்ள ‘நூஹுத்’ நகருக்கு அருகில் அமைந்துள்ள ‘அல்-ஸாரா’ தங்கச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்ததில், குறைந்தபட்சம் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவக் குழுவினரும் தப்பிய தொழிலாளர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

சுரங்கப் பாதைகளில் ஏராளமான தொழிலாளர்கள் இன்னும் சிக்கியுள்ளனர். இடிபாடுகள் மற்றும் மண்ணை அகற்றுவதற்குத் தேவையான கனரக இயந்திரங்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள் அங்கு உடனடியாகக் கிடைக்காததால், கைமுறையாக மீட்புப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்ற பிராந்தியமானது, நாட்டின் இராணுவத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் போரில் ஈடுபட்டு வரும் ‘விரைவு ஆதரவுப் படைகளின்’ கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆபிரிக்காவின் முக்கிய தங்க உற்பத்தியாளர்களில் ஒன்றான சூடானில், உரிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தரம் பேணப்படாததால் பாரம்பரியச் சுரங்கங்களில் இத்தகைய விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன.

2023 ஆம் ஆண்டில் 14 பேரும், 2021 ஆம் ஆண்டு 38 பேரும் இவ்வாறான விபத்துகளில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts