வியாட்நாம் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டியான 2026 ஆம் ஆண்டுக்கான உலக அழகு ராணி பட்டத்தை டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா வென்றிருந்தாலும், தனுசியா செட்டி என்ற பெயர் தமிழர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.

உலக அழகு ராணி போட்டியில் 3ஆம் இடத்துக்கு தெரிவான அவர், மலேசியாவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி பெண் என்பது உலகத் தமிழ் சமூகத்துக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
உலகின் 100 ற்கும் மேற்பட்ட நாடுகளின் போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், தனது அறிவாற்றல், தன்னம்பிக்கை மற்றும் கம்பீரமான தோற்றத்தின் மூலம் தனுசியா உலக மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.
தனுசியா ஆசிரியராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் செயல்பட்டு வரும் நிலையில் இளைஞர்களின் கல்வி, தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவ வளர்ச்சி குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதையும், பல்வேறு நிகழ்ச்சிகளில் வலியுறுத்தி வருகிறார்.
சமூக அக்கறை மற்றும் தெளிவான கருத்துக்களே அவரை ஒரு சாதாரண அழகிப்போட்டி போட்டியாளரிலிருந்து தனித்துவமான ஆளுமையாக மாற்றியுள்ளது என கூறினால் அது மிகையாகாது.
சர்வதேச அழகு ராணி போட்டியின் போது ஆங்கிலம், மலாய், மாண்டரின் மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் சரளமாக பேசியது அவரது தனித்துவத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
“மாற்றம் என்பது நமக்குள் இருந்தே தொடங்க வேண்டும்” என்ற கருத்தை நான்கு மொழிகளிலும் பகிர்ந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிற நிலையில் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு, சர்வதேச மேடையில் தமிழ் மொழி ஒலித்த தருணத்தினை எண்ணி பெருமிதம் கொள்கின்றனர்.
உலக அரங்கில் தமிழ் மொழியைப் பெருமையுடன் பேசியதோடு, தன்னம்பிக்கையையும் கலாசார அடையாளத்தையும் இணைத்து வெளிப்படுத்திய விதம் பல இளம் பெண்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.