யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை மாணவி குமாரசாமி கிருஷாந்தி உள்ளிட்டோரின் நினைவுவேந்தல் நிகழ்வு, செம்மணி பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்டு, அங்கு புதைக்கப்பட்ட ஏனையவர்களுக்கும் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
1996ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி, 18 வயதுடைய யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான கிருஷாந்தி வீதியால் சென்று கொண்டிருந்தபோது, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
கிருஷாந்தியை செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைத்திருந்ததை அவதானித்த பிரதேச மக்கள் அதனை அவரது தாயாரிடம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா, சகோதரன் குமாரசாமி பிரணவன் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தொன்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்க உதவியாளர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் மாணவியைத் தேடி செம்மணி இராணுவ முகாமிற்குச் சென்று விசாரித்துள்ளனர்.
அவ்வாறு தேடிச் சென்ற அம்மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்தனர். அன்றைய தினம் நள்ளிரவு, கிருஷாந்தி உட்பட படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களும் செம்மணி பகுதியிலுள்ள வயல்வெளியில் புதைக்கப்பட்டன.