2024 ஆம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழாவில் மாம்பழத் திருவிழா என அழைக்கப்படும் தண்டாயுதபாணி உற்சவத்தின்போது நல்லூர் கந்தசுவாமியார் சிறுவர் மாம்பழக் கடன் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இவ்வருடமும் சிறுவர்களுக்கு மாமரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்கப்படுகின்ற மாமரக்கன்றுகளை சிறுவர்கள் தங்களது வீடுகளில் நடுகை செய்து, அவற்றைப் பேணிப் பாதுகாத்து, அவற்றிலிருந்து கிடைக்கப்பெறும் மாங்கனிகளை வருடந்தோறும் மாம்பழத் திருவிழாவின்போது கந்தசுவாமியாருக்கு வழங்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் கருப்பொருளாகும்.
2024 ஆம் ஆண்டு மாமரக்கன்றுகளை வழங்கியபோது, சிறுவர்களிடம் “நீங்கள் இந்தக் கடனைப் பெற விரும்புகின்றீர்களா? இதில் இருந்து கிடைக்கும் மாங்கனியை கந்தசுவாமியாருக்கு வழங்குவீர்களா? நீங்கள் இம்மாமரத்தை நட்டு, அதன் கனியை கந்தசுவாமியாருக்குத் தாருங்கள்” என நல்லூர் கந்தசுவாமி கோவில் தேவஸ்தானத்தவர்களால் கூறப்பட்ட அன்பானதும், பண்பானதும், கனிவானதுமான வார்த்தைகள் மிகச் சிறப்பானதாக அமைந்திருந்தன.
இந்நிலையில், இவ்வருடம் “கடந்த ஆண்டுகளில் நீங்கள் மாமரத்தைப் பெற்றீர்களா?” என்ற வினாவுடன் குறித்த அன்பான வார்த்தைகள் ஆரம்பமாகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்லூர் கந்தசுவாமியார் சிறுவர் மாம்பழக் கடன் திட்டத்தில் இணைந்து மாமரக்கன்றுகளைப் பெற்றிருந்தவர்கள் இவ்வருட கடன் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. புதிய சிறுவர்களுக்கே இம்முறை மாமரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
“மாமரங்களைத் தருகிறோம்; அதன் கனிகளைத் தாருங்கள்” என்ற எண்ணத்தின் ஊடாக எமது அடுத்த தலைமுறையினரை நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு ஊக்கமளித்து, தன்னம்பிக்கையை வளர்த்து, பொறுப்புவாய்ந்த ஒரு சமூகத்தை உருவாக்க முடியும் என்பதையும், மரநடுகை என்ற பசுமைப் புரட்சியை இவ்வாறும் முன்னெடுக்க முடியும் என்பதையும் நல்லூர் கந்தசுவாமி கோவில் வெளிப்படுத்தி நிற்கின்றது.
இவ்வாண்டு நல்லூர் கந்தசுவாமியாரின் பசுமைப் புரட்சியின் மூன்றாவது ஆண்டு.