இந்தியாவில் பெற்றோர் ஐபோன் வாங்கித் தர மறுத்ததால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் மலையிலிருந்து குதித்துத் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், அவரைக் காப்பாற்றச் சென்ற பெற்றோர் அவருடன் கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் கூறி செய்தித் தளங்கள் மற்றுமு் சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது எனத் தகவல்களைச் சரிபார்க்கும் அமைப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட ஆரம்பக்கட்டத் தகவல்களின் அடிப்படையில் “ஐபோன் பிரச்சினையே உயிர் மாய்ப்பிற்கு காரணம்” எனக் குறிப்பிட்டுச் செய்திகளை வெளியிட்டன.
ஆகஸ்ட் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திற்குட்பட்ட திஸ்காவ் பகுதியில் அமைந்துள்ள ‘கவ்வாடியா டொங்கர்’ மலைப்பகுதியிலிருந்து கீழே விழுந்து 18 வயதான குணால் சந்த்குடே, அவரது தந்தை முரளிதர் மற்றும் தாய் சங்கீதா ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, “ஐபோன் வாங்கித் தருமாறு வீட்டில் தகராறில் ஈடுபட்ட இளைஞர் மலையுச்சிக்குச் சென்று அங்கிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும், அவரைக் காப்பாற்ற முயன்ற தந்தை மற்றும் தாய் அவருடன் சேர்ந்து உயிரிழந்தனர்” என்றும் செய்திகள் பரப்பப்பட்டன.அன்றாட உலகச் செய்திகளைப் பின்தொடர்வது
சத்ரபதி சம்பாஜிநகர் பொலிஸார் மற்றும் Times of India உள்ளிட்ட முன்னணி ஊடகங்களின் அறிக்கைகளின்படி, இத் துயரச் சம்பவத்திற்கு ஐபோன் காரணம் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞரான குணால் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவருமே ஏற்கனவே ஐபோன் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வந்தனர் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடும்பத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பப் பிரச்சினைகள், தாய்-தந்தைக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் மற்றும் சொத்து தொடர்பான தகராறுகளே இச் சம்பவத்திற்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளன.
ஆகஸ்ட் 21 ஆம் திகதி காலை, மன உளைச்சலில் இருந்த குணால் மலைக்குச் சென்று தற்கொலை செய்வதாகக் கூறியதையடுத்து, பெற்றோர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் சுமார் 2 மணிநேரம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குணால் சமாதானமடைந்து பின்வாங்குவது போல் தோன்றிய தருணத்தில், அவரது தந்தை அவரைப் பிடித்து இழுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் நிலைதடுமாறி மலையிலிருந்து கீழே விழுந்தனர். அதனைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த தாயாரும் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சத்ரபதி சம்பாஜிநகர் துணைப் பொலிஸ் ஆணையர் தெரிவிக்கையில்,
“இளைஞர் குணால் நீண்டநாட்களாகவே தீவிர மன உளைச்சலில் இருந்துள்ளார். சம்பவ இடத்தில் பொலிஸார், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அவரைச் சமாதானப்படுத்த எடுத்த தீவிர முயற்சிகள் துரதிர்ஷ்டவசமாகத் தோல்வியில் முடிந்தன.
குடும்பத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்துவிட்டதால் நேரடிச் சாட்சிகள் இல்லை. எனினும், ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி ஐபோன் காரணமாகவே இவர்கள் உயிரிழந்தனர் என்பதில் உண்மை இல்லை. ஆதாரமற்ற இத்தகைய வதந்திகளைப் பரப்புவதைப் பொதுமக்கள் நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குணால் இதற்கு முந்தைய ஆண்டும் (2025) இதேபோன்று தொலைபேசி கோரி இதே மலைப்பகுதிக்குச் சென்று மிரட்டல் விடுத்ததாகவும், அப்போது பொலிஸார் தலையிட்டு அவரைக் காப்பாற்றியதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் ‘ஐபோன் தவணைக்கட்டணப் பிரச்சினை’ முற்றிலும் பொய்யானது எனக் கூறி ஒரு காணொளியை வெளியிட்டார். “எங்கள் குடும்பத்தின் உண்மையான சூழலையோ, உட்பிரச்சினைகளையோ அறியாமல் சமூக வலைத்தளங்களில் மனம்போன போக்கில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” என தாய்வழி அத்தை (பல்லவி பாட்டீல்) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இளைஞரும் அவரது தாயாரும் ஏற்கனவே ஐபோன் வைத்திருந்த நிலையில், குடும்பப் பின்னணியில் இருந்த மன அழுத்தம் மற்றும் ஆழமான உட்க குடும்பச் சிக்கல்களை மறைத்துவிட்டு, சமூக வலைத்தளங்கள் ஐபோனை மட்டுமே பிரதானப்படுத்தி வதந்தியைப் பரப்பியுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, ஐபோன் வாங்கித் தராததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார் மற்றும் பெற்றோர் பலியானார்கள் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் தவறான மற்றும் வழிகாட்டக்கூடிய பரப்புரையாகும். குடும்பத் தகராறு மற்றும் காப்பாற்ற முயன்றபோது ஏற்பட்ட விபத்தே இச் சம்பவத்திற்கு உண்மையான காரணமாகும்.