காவல்துறைக்கே பாதுகாப்பில்லையா? – கைவிலங்கு சர்ச்சையும் கேள்விக்குறியாகும் சட்ட ஒழுங்கும்!

குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட வேண்டிய அரசுப் பொருளான கைவிலங்கை, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் தனது ஹெல்மெட் திருடு போகாமல் இருக்க பைக்கில் பூட்டி வைத்துள்ளார்.

பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த காவல் நிலைய வளாகத்திலேயே காவலரின் பொருளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையையும், அரசுப் பொருளைச் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திய துறை சார்ந்த விதிமீறலையும் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தமிழகத்தில் சமீபகாலமாகப் பெண் காவலர்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றச் சம்பவங்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குடியாத்தம் பெண் தலைமைக்காவலர் தாமரைச்செல்வி கணவரால் படுகொலை செய்யப்பட்டதும், சிவகங்கை அருகே பெண் காவலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவமும் காவல்துறையின் பாதுகாப்பு நிலையைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.

“பொதுமக்களையும் காவலர்களையும் பாதுகாக்க வேண்டிய அமைப்பிலேயே பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை” எனப் பல்வேறு அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts