காணிகளை விடுவிக்க கோரி பலாலியில் போராடியவர்களுக்கு எதிராக வழக்கு!!

வலி. வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தினால் பொது மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தபட்டதாக கூறி பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்ரன் சுதாகர், வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன் , ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் கணேசப்பிள்ளை வேந்தன் மற்றும் எம். குணசேகரன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி மன்றில் ஆஜர் ஆகுமாறு அழைப்பு கட்டளை அனுப்ப உத்தரவிட்டுள்ள மன்று அன்றைய தினத்திற்கு வழக்கினை திகதியிட்டுள்ளது.

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அன்றைய தினம் போராட்ட வடிவத்தை மாற்றி பலாலி செபஸ்தியார் ஆலய முன்றலில் இருந்து கறுப்பு மேலங்கி அணிந்து கறுப்புக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறு பலாலி சந்தி வரையில் ஊர்வலமாக வந்து பலாலி சந்திக்கு அருகில் உள்ள இராணுவ முன்னரங்கு முன்பாக கூடி கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு சில மணி நேரம் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் பலாலி சந்தி பகுதிக்கு சென்று மதியம் வரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தினால் வீதியில் பயணித்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக கூறியே பலாலி பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Related Posts