தோட்டத்துறை (ஸ்லேவ் ஐலண்ட்) அருள்மிகு லெட்சுமி முருகன் கோயிலுக்குச் சொந்தமான, சுமார் 2 கோடியே 67 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அக்கோயிலின் பிரதம குருவுக்குக் கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடையை விதித்துள்ளது.
சதீஸ்வர குருக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், அவர் தலைமறைவாகியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கோயிலின் நகைகளை அடகு வைத்து, கொட்டாஞ்சேனை நியூ செட்டி வீதியில் (New Chetty Street) காணி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்தியதாகக் குருக்கள் மீது காவல்துறையினர் குற்றம் சுமத்துகின்றனர்.
காணாமல்போன கோயில் சொத்துக்களை மீட்டெடுப்பதற்கும், முறைகேடான முறையில் வாங்கப்பட்ட அந்தச் சொத்துக்களைப் பரிசீலனை செய்வதற்கும் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளையும் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.