நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஜனநாயகன் திரைப்படம், ரிலீஸ் ஆன மூன்றே வாரத்தில் கருப்பு படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடித்து உள்ளது.

தமிழ் சினிமாவில் 2026 ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்க படங்களில் ஒன்று தான் ஜனநாயகன். விஜய், ஹீரோவாக நடித்த கடைசி படம் என்பதால் இதன்மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்தை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே ரிலீஸ் செய்ய இருந்தனர்.
ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஜனநாயகன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை. பின்னர் படக்குழுவினர் நீதிமன்றம் சென்று சட்டப்போராட்டம் நடத்தியதால் படத்தின் ரிலீஸ் மேலும் தாமதம் ஆனது. அதன்பின்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதால் ஜனநாயகன் படம் அப்படியே முடங்கிப்போனது.
இப்படி பல்வேறு தடைகளை தாண்டி அப்படம் ரிலீஸ் ஆனதும் ஒரு நல்லது தான் என விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். ஏனெனில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருந்தால் வெறுமனே தளபதி விஜய்யின் கடைசி படமாக அது இருந்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதம் ரிலீஸ் ஆனதால், அது முதல்வர் விஜய்யின் முதல் படமாக அமைந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில் என டைட்டில் கார்டில் விஜய் பெயரை பார்த்ததும் ரசிகர்கள் சிலாகித்துப் போயினர். இதனால் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத படமாக ஜனநாயகன் மாறியது.
வழக்கமாக ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் முன்னர் இணையத்தில் லீக் ஆகிவிட்டால், அப்படம் நிச்சயம் பிளாப் தான் என சொல்லிவிடலாம். இதற்கு முன் சில படங்கள், அவ்வாறு லீக் ஆகி படுதோல்வியை சந்தித்திருக்கின்றன. ஆனால் ஜனநாயகன் படத்திற்கு நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. இது ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி இருந்தாலும், விஜய்யின் கடைசி படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் தியேட்டர் நோக்கி படையெடுத்து வந்து இப்படத்தை பார்த்து ரசித்தனர்.
அதன் பலனாக ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆன மூன்றே வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாவுக்கு மேல் வசூலை ஈட்டி சாதனை படைத்தது. இப்படம் 18 நாட்களில் உலகளவில் 318 கோடி வசூலித்து உள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 142 கோடி ரூபா வசூலித்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 13 கோடி ரூபாயும், கேரளா மற்றும் கர்நாடகாவில் 47 கோடி ரூபாயும், இதர மாநிலங்களில் 22.1 கோடி ரூபாயும், ஓவர்சீஸில் 94 கோ ரூபாயும் வசூலித்து இருந்தது. இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய தமிழ் படம் என்கிற சாதனையை ஜனநாயகன் படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் 308 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் முறியடித்து உள்ளது. இப்படம் இணையத்தில் லீக் ஆகாமல் இருந்திருந்தால் 500 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் என சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதனால் விஜய்யின் கெரியரில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையை லியோ தான் தக்க வைத்து உள்ளது. அந்த சாதனையை ஜனநாயகன் படத்தால் முறியடிக்க முடியாமல் போனது.