யாழில் ‘நேர்மை நடைபவனி’

அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தி ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான மாபெரும் ‘நேர்மை நடைபவனி’ நிகழ்வானது இன்று (28.07.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலுக்கு அமைய முன்னெடுக்கப்படும் ‘நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், நேர்மை வாரத்தின் (2026 ஜூலை 27 முதல் 31 வரை) இரண்டாம் நாள் நிகழ்வுகள் ‘நேர்மைமிக்க டிஜிட்டல் அரச சேவை’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்றன.

வடக்கு மாகாண சபையும், யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் ஒருங்கிணைந்து முன்னெடுத்த இந்த நடைபவனியில், வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்கள் பங்கேற்ற அணியை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆளுநர் செயலக முன்றலில் ஆரம்பித்து வைத்தார். அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் நிரல் அமைச்சுக்களின் கீழான திணைக்கள அணியை யாழ்ப்பாண மாவட்டச் செயலர் ம.பிரதீபன் மாவட்டச் செயலக முன்றலில் ஆரம்பித்து வைத்தார்.

ஆளுநர் செயலகம் மற்றும் மாவட்டச் செயலக முன்றல்களில் இருந்து இரு அணிகளாக ஆரம்பமான இந்த நடைபவனி, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் உள்ள ஏ – 9 வீதியில் ஒன்றிணைந்தது. அங்கிருந்து ஆஸ்பத்திரி வீதி ஊடாக வேம்படிச் சந்தியைச் சென்றடைந்து, பின்னர் பிரதான வீதியில் சங்கமித்து அவ்வீதி ஊடாக மீண்டும் மாவட்டச் செயலக முன்றலை வந்தடைந்தது.

எவ்வித மேற்பார்வையும் இன்றித் தார்மீக ரீதியாகச் செயற்பட்டு, தனிப்பட்ட நலன்களை விடப் பொதுமக்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கும் அரச உத்தியோகத்தர்களை உருவாக்குவதே இந்தத் தேசிய வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்த நேர்மை நடைபவனியில் ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலர்கள், திணைக்களத் தலைவர்கள், பொலிஸ், பாதுகாப்பு மற்றும் கடற்படை உத்தியோகத்தர்கள், மாகாண சபைக்குட்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயலணியின் இணைப்பாளர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் பங்கேற்றனர்.

Related Posts