தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் 3 குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிப் படுகொலை செய்துவிட்டு, தாயும் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெருஞ்சோகத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தர்மபுரி தடங்கம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி அம்சா (35). இத்தம்பதிக்கு ஜீவிதா (16), நவீனா (6) என்ற இரு மகள்களும், குமரன் (3) என்ற ஒரு மகனும் இருந்தனர். 11 ஆம் ஆண்டில் கல்வி கற்றுவந்த மூத்த மகள் ஜீவிதா உட்படக் குடும்பத்துடன் இவர்கள் வசித்து வந்த நிலையில், கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 19ஆம் திகதி மீண்டும் ஏற்பட்ட தகராறையடுத்து, அம்சா தனது 3 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அருகிலுள்ள கிணற்றில் சடலங்கள் மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதியமான்கோட்டை பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் கிணற்றிலிருந்து தாய் மற்றும் 3 பிள்ளைகளின் சடலங்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் தகராறு காரணமாகவே அம்சா தன் மூன்று பிள்ளைகளையும் கிணற்றில் தள்ளிக் கொன்று, தானும் குதித்துத் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அதியமான்கோட்டை பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கணவர் சரவணனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.