எனது உடல்மொழியில் உள்நோக்கம் இல்லை!!

என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என தமிழக முதல்வர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கப் பதிவில், சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று பொலிஸ் மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சட்டப்பேரவையில் பொலிஸ் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டம் – ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதில் அளித்தார்.

அவர் பதிலுரையின் போது தி.மு.க. மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சர்க்காரியா கொமிஷனின் அறிக்கை, கட்சி நிதி தொடர்பான அமுலாக்கத் துறை அறிக்கையைக் குறிப்பிட்டுப் பேசினார்.

கூடவே, எதற்கெடுத்தாலும் மிசா, மிசாவைப் பார்த்தவர்கள் என்று பேசுகிறார்கள். மிசாவைப் பற்றிய வரலாறு எல்லோருக்கும் தெரியும் என்று பேசுகையில் தனது தாடையத் தட்டினார். அந்த உடல்மொழிக்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

பொது வெளியிலும் முதல்வரின் உடல் மொழி தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. உருவக் கேலிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Related Posts