கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், லங்கா பிறீமியர் லீக் (LPL) 2026 தொடரின் தொடக்க விழா இன்று (17) கொழும்பு SSC மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

கிரிக்கெட், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் மற்றும் தேசியப் பெருமிதம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் சர்வதேச தரம் வாய்ந்த இந்த உள்நாட்டு T20 தொடரின் ஆறாவது அத்தியாயம் இந்த பிரம்மாண்டான தொடக்க விழாவுடன் ஆரம்பமாகிறது.
ஏல்பிஎல் வரலாற்றிலேயே மிகவும் மறக்கமுடியாத ஒரு தொடக்கமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேரடி இசை நிகழ்ச்சிகள், உத்தியோகபூர்வ மரபுவழி நிகழ்வுகள், அணிகளின் அறிமுகம், LPL சம்பியன் கிண்ணம் அறிமுகம் மற்றும் வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையிலான 500 ட்ரோன்களின் வான்வெளி ஒளிக்காட்சி (Drone Show) என கிரிக்கெட் இரசிகர்கள் தவறவிடக்கூடாத பல சுவாரஸ்யங்களை இந்தத் தொடக்க விழா உள்ளடக்கியுள்ளது.
இந்த மாபெரும் மாலைப் பொழுதை மேலும் சிறப்பிக்கும் வகையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற யொஹானி, சங்க தினேத் மற்றும் செண்டிகிரேட்ஸ் ஆகிய இலங்கையின் முன்னணி கலைஞர்கள் வழங்குகின்ற இசை நிகழ்ச்சிகள் அரங்கேறவுள்ளன.
இதில் குறிப்பாக, சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகி யொஹானி, தனது உலகளாவிய ஹிட் பாடலான ‘மெனிகே மகே ஹித்தே’ பாடல் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தவுள்ளார்.
அவருடன் இணைந்து பிரபல பாடகர் சங்க தினேத் மற்றும் ‘செண்டிகிரேட்ஸ்’ இசைக் குழுவினரும் உள்ளூர் மற்றும் சர்வதேச ரசிகர்களைக் கவரும் வகையில் தங்களது அதிரடி இசை நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர்.