ChatGPT மூலம் கார்ட்டூன் தளத்தின் 46,000 கணக்குகளை முடக்கிய 15 வயது மாணவன் ஜப்பானில் கைது!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்ட ChatGPT மென்பொருளின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட கணினி நிரல் மூலம், பிரபல ஜப்பானிய கார்ட்டூன் இணையதளத்தின் 46,000 இற்கும் அதிகமான பயனர் கணக்குகளை இரத்து செய்த 15 வயது பாடசாலை மாணவனை ஜப்பானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த மாணவன் ‘Bandai Namco Filmworks’ நிறுவனத்திற்குச் சொந்தமான ‘Bandai Channel’ என்ற நேரடி ஒளிபரப்பு இணையதளத்தின் மீது சைபர் தாக்குதலை மேற்கொண்டு, அதன் வணிக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இந்த மாணவன் குறித்த இணையதளத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாடு ஒன்றை கண்டறிந்துள்ளார். அதன் பின்னர், உறுப்பினர் கணக்குகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை தானியங்கி முறையில் மேற்கொள்வதற்கான கணினிச் செயற்பாட்டை உருவாக்குவதற்கு அவர் ChatGPT இன் உதவியைப் பெற்றுள்ளார்.

கடந்த 2025 நவம்பர் 4 ஆம் திகதி இந்த மாணவரால் ஏவப்பட்ட போலி கணினி கட்டளைகள் காரணமாக, அந்த இணையதளத்தில் பதிவு செய்திருந்த 46,812 உறுப்பினர்களின் கணக்குகள் தானாகவே இரத்தாகின. இதன் காரணமாக முடங்கிய இணையதளத்தின் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவர அந்த நிறுவனத்திற்கு டிசம்பர் மாதம் வரை காலம் எடுத்துள்ளது.

பொலிஸ் விசாரணைகளின் போது சந்தேகநபரான மாணவன் பின்வருமாறு வாக்குமூலம் அளித்துள்ளார்:

“கணக்குகளை நீக்குவதற்கான குறியீட்டை நான் தனியாகவே தயாரித்தேன், ஆனால் அது செயற்படுவதற்கு நீண்ட நேரம் எடுத்தது. அதனால் நான் ChatGPT இன் உதவியைப் பெற்று, வேறொரு கணினி மொழியின் மூலம் அதனை விரைவாக முடித்தேன். நான் தரம் 4 இல் இருந்தே தனியாக கணினி நிரலாக்கத்தைக் கற்றுக்கொண்டவன்.

எனக்கு இந்த நிறுவனத்துடன் எந்தவொரு கோபமும் இருக்கவில்லை. இலகுவாக ஊடுருவக்கூடிய அதிகளவிலான கணக்குகள் இருந்தமையினாலேயே இந்த இணையதளத்தை நான் தேர்ந்தெடுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் தகவல்படி, குறித்த நிறுவனம் அந்த மாணவனின் கணினி இணைய முகவரியை முடக்க நடவடிக்கை எடுத்த போதிலும், அவன் 30 இற்கும் மேற்பட்ட தடவைகள் தனது IP முகவரியை மாற்றியமைத்துத் தொடர்ந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளான். இந்த மாணவன் இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதத்திலும் வேறொரு கணினி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ‘Bandai Namco Filmworks’ நிறுவனம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளதுடன், சேவை முடங்கிய காலப்பகுதிக்கான கட்டணத்தை மீளச் செலுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், பயனர்களின் தரவுகள் எதுவும் இணையத்தில் கசியவில்லை அல்லது தவறாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Related Posts