செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக, இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவைப் பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய அமர்வில் உரையாற்றிய அவர், இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ள செம்மணியில், இதுவரை 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, 390 அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கிருசாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணியில் 300-க்கும் மேற்பட்டோர் புதைக்கப்பட்டதாகக் கூறியிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
பன்னாட்டு ஆய்வாளர்கள் முன்னிலையில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக ராஜபக்ச கடந்த ஆண்டு ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியிருந்ததால், அவரிடம் பன்னாட்டு விசாரணை நடத்தி அரியாலை மற்றும் கொழும்புத்துறை புதைகுழிகள் குறித்தும் உண்மைகளைக் கண்டறிய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.