ஏராளமான டிஜிட்டல் தள ரசிகர்களை கவர்ந்திருக்கும் நடிகர் பவிஷ் நாராயண் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லவ் ஓ லவ்’ திரைப்படம்- எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தில் பவிஷ் நாராயண், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஃபாக்ஸ்ன் இசையமைத்திருக்கிறார்கள். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜினிமா மீடியா & என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் தினேஷ் ராஜ் மற்றும் ஜி. தனஞ்செயன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வரும் நிலையில்… இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தனுஷின் உறவினரான பவிஷ் நாராயணுக்கு திரையுலக வணிகர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவு இருப்பதால் இப்படத்திற்கு வணிக ரீதியான தொடக்கம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.