ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பானது எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளதான இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் முன்னாள் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாக இருந்த அமரர்.சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களின் 113 வது ஜனன தின நிகழ்வு களுவாஞ்சிகுடி சீ.மூ.இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவரும் வடமாகாணசபை அவை தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத்,கோடீஸ்வரன்,டாக்டர் சத்தியலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது களுவாஞ்சிகுடி பிரதான வீதியிலுள்ள அமரர்.சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களின் சிலைக்கு கட்சி பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதனை தொடர்ந்து பிரதான வீதி வழியாக மேளதாள வாத்தியங்கள் முழங்க அனைவரும் அழைத்து வரப்பட்டு களுவாஞ்சிகுடி மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் நடைபெற்றதனை தொடர்ந்து சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் ஜனன தின சிறப்பு நிகழ்வு ஆரம்பமானது.
மதகுருமார்களால் மங்கள விளங்கேற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அமரர். சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களின் உருவப்படத்திற்கு முன்பாக கட்சி பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் விளங்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் நினைவுப்பேருரையினை இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்,முன்னாள் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
மாணவர்களின் வரவேற்பு நடனங்கள் இந்த நிகழ்வின்போது நடைபெற்றதுடன் மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர்,தவிசாளர்கள் கட்சி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பெருந்திரளான மக்கள் இளைஞர்கள் மற்றும் ஊர்ப் பெருமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
அமரரின் அரசியல் பயணம், தமிழர் நலனுக்காக அவர் செய்த அர்ப்பணிப்பு சேவைகள் மற்றும் அவரது மக்கள் நேசம் அனைவராலும் நினைவுகூரப்பட்டதுடன், நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றியை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த பதில் தலைவர்;
இலங்கை தமிழரசுக்கட்சியை பொறுத்த வரையில் முதன்மைக்கட்சியாக இருந்தாலும் கூட தமிழ் தேசிய கட்சிகளை இணைத்துக்கொண்டு பயணிக்கவேண்டிய கடப்பாடு எங்களுக்கு உண்டும்.அந்த பொறுப்பினை நாங்கள் இந்த வருட ஆரம்பத்தில் ஆரம்பித்தோம்.
கடந்த உள்ளுராட்சிமன்றம்,பாராளுமன்ற தேர்தல்களின்போது எதிரும்புருமாறு நின்ற ஜனநாயக தேசிய கூட்டணியுடனான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கின்றோம்.அதில் ஒவ்வொரு கட்சியும் தங்களின் தனித்துவங்களைப்பேணிக்கொண்டு செயற்படுவது என்ற இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம்.
மீண்டும் எங்களுடன் வந்து இணைந்துகொள்ளுங்கள் என்று நானும் பொதுச்செயலாளரும் அழைப்பு விடுத்திருக்கின்றோம்.அந்த அழைப்பினை தொடர்ந்து ஜனநாயக தேசிய கூட்டணியை பொறுத்த வரையில் அவர்கள் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. பரந்தமனப்பான்மையுடன் எங்களுடன் பேசினார்கள்.அவ்வாறானதொரு நிபந்தனையற்ற இணைவுகள் ஏனையவர்களிடமிருந்தும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
சிங்கள தேசிய கட்சிகளின் தலைமைகளுக்கு எந்த கட்சியும் எங்களுக்கு விடிவுதராது.அவர்களது கட்சிக்குள் எங்களது மக்களும் ஊடுறுவி பாராளுமன்ற உறுப்பினர்கள்,உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றார்கள்.ஆனால் அவர்களுக்கு சிங்கள தலைமைகளுக்கு மேலாக செல்லமுடியாது.