யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சேவைகள் குறித்து பாராளுமன்ற சுகாதார மேற்பார்வைக் குழுவில் ஆய்வு

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் தற்போதைய சேவைகள் மற்றும் எதிர்காலத்தில் விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பான விடயங்கள், பாராளுமன்ற சுகாதார மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.

மேற்படி குழுக் கூட்டம் கௌரவ வைத்தியர் நிஹால் அபேசிங்கே அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜயசிங்கே, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள் மற்றும் யாழ் மருத்துவ பீடாதிபதி குழுவினர் கலந்து கொண்டு, வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை மற்றும் சேவைகள் குறித்து விரிவாக விளக்கினர். குறிப்பாக, ஆளணி பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கு தீர்வாக, எதிர்வரும் காலங்களில் தேவையான சுகாதார ஊழியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்பார்வைக் குழு உறுதி அளித்தது. மேலும், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட தற்போதைய ஆளணியை அதிகரிப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்காக, விரைவில் மேலதிக கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டது.

மேலும், இலங்கையில் உள்ள மூன்று தேசிய வைத்தியசாலைகளுக்கு அடுத்ததாக, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையை நான்காவது தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்துவது குறித்த தீர்மானமும் எடுக்கப்பட்டது. இதற்காக தேவையான அடிப்படை ஆளணி அதிகரிப்பு மற்றும் சில முக்கிய சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு, தேசிய வைத்தியசாலையாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன், வைத்தியசாலையில் நிலவும் இடப்பற்றாக்குறை, புதிய விடுதிகள் அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, புதிய பத்து மாடி கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

இவ்வருடத்தில் வைத்தியசாலையின் சேவைகளுக்கான உபகரணங்கள் கொள்வனவு மற்றும் திருத்தப் பணிகளுக்கான நிதி விடுவிப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகள் சிறப்பாக இயங்கி வருகின்றமை பாராட்டப்பட்டது.

Related Posts