இளைஞர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!!

நாட்டில் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) அல்லது ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையான 60,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதன் ஆராய்ச்சிப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தாமர தர்ஷன தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகளவில் பரவியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிட்டார்:

“கடந்த சில வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட கைதுகளின் புள்ளிவிபரங்களின்படி, மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் பாவனை படிப்படியாக அதிகரித்து வருவதை அடையாளம் காண முடிகிறது. கஞ்சா தொடர்பான சில போக்குகளையும் காண முடிகிறது. இருப்பினும் ஹெரோயின் மற்றும் கஞ்சா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது ‘ஐஸ்’ போதைப்பொருள் பாவனை வேகமாக அதிகரித்து வருகின்றது. போதைப்பொருள் பயன்படுத்துபவர்களில் 99% வீதமானோர் பல்வேறு வகையான போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்கள். அவர்கள் சந்தர்ப்பத்திற்கேற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வுப் பிரிவின் பணிப்பாளர் சாந்த கமகே கருத்துத் தெரிவிக்கையில், 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

Related Posts