யாழ்நகர மையத்திற்கும் மருத்துவ பீடத்திற்கும் இடையில் விசேட பேரூந்து சேவைகள் நேற்றையதினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை உறுப்பினராக கபிலன் சுந்தரமூர்த்தி அவர்கள் தெரிவிக்கையில்….

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் பீடம் என்பவற்றில் பட்டக்கல்வியைத் தொடரும் மாணவர்கள் யாழ்ப்பாண நகரமையத்திலிருந்து குறித்த இரு பீடங்களிற்கும் கற்றல், ஆய்வு மற்றும் இணைபாடவிதானச் செயற்பாட்டிற்கான அணுகலைச் சிரமமின்றி மேற்கொள்ள ஏதுவாகச் சிறப்புப் பேரூந்து சேவைகள் ஒழுங்குபடுத்தித் தரப்படல் வேண்டுமென்ற கோரிக்கைக்கு அமைவாகப் பேரூந்து சேவைகளை வழங்க இலங்கைப் போக்குவரத்து சபையுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு அதற்கான சம்மதமும் எட்டப்பட்டிருந்தது.
அதன் மேலாக நேற்றைய தினம் (11.11.2025) யாழ் நகர மையத்திற்கும் மருத்துவ பீடத்திற்கும் இடையிலான பேரூந்துச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது சிறப்பு.
குறித்த சேவை யாழ்நகர மையத்திற்கும் மருத்துவ பீடத்திற்கும் இடையில் காலை 7.30 மணிக்கும், மதியம் 12.15 மணிக்கும் மற்றும் மாலை 5.00 மணிக்கும் இடம்பெறும். இச்சேவைகளிற்காக 2 பேரூந்துகள் சேவையிலீடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலாகக் குறித்த பயணத்திற்காக மாணவர்களிற்கு ரூபா 441 பெறுமதியுடன் மாதாமாதம் பயணம் மேற்கொள்ளும் வகையில் மாதாந்த பருவகாலச் சிட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த அணுகலுக்கான மாணவர்களினது மாதாந்தப் பயணச் செலவில் ரூபா 1,400 வரை கழிவிடப்பட்டுத் தனித்ததும், பாதுகாப்பானதுமான சேவை கிடைக்கப்பெற ஆவன செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இதன் தொடர்ச்சியாக முகாமைத்துவக் கற்கைகள் பீடத்திற்கான சேவை இதே முறைமையில் எதிர்வரும் 17.12.2025 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.