உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பணிகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (05) காலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (06) காலை 7 மணிக்குத் ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியாக 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெற உள்ளது.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறும் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் கட்டாயமாக வருகைதர வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்தோடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்னும் பெறாத வாக்காளர்கள் இன்றும் நாளையும் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திற்குச் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 65,000இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக சுமார் 3,000 அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக PAFFREL அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்றும் நாளையும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, மே 7 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று முதல் மே 7 ஆம் திகதி வரை நாட்டலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இருப்பினும், பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரங்களை வழங்கும் அனைத்து கருமபீடங்களும் இன்றும் நாளையும் மூடப்படும் என்று மேல் மாகாண பிரதம செயலாளர் செயலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட வாகனத்திற்கான வாகன வருமான அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் மேற்படி திகதிகளில் காலாவதியாகிவிட்டால், தாமதக் கட்டணமின்றி கடமை தொடங்கும் முதல் நாளில் அனுமதிப்பத்திர கட்டணத்தை மாத்திரம் செலுத்தி குறித்த வாகனத்திற்கான வருமான அனுமதிப்பத்திரத்தை பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதம செயலாளர் செயலகம் தெரிவித்துள்ளது.

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகமும் இன்றும் நாளையும் மூடப்பட உள்ளது.

கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாக பயன்படுத்தப்படுவதன் காரணமாக இவ்வாறு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts