ஜனாதிபதி வேட்பாளர்களின் கவனத்திற்கும் – என் தமிழ் மக்களுக்கும்!
இந்திய முறையிலான அதிகார பகிர்வு!

1933ஆம் ஆண்டில் பிறந்து 86ஆண்டுகளின் பின் நான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கின்றேன். நாமும் நம்நாடும் கண்டுவந்த – அனுபவித்த பல்வேறு இன்ப துன்பங்களை நினைவுகூர்ந்து பார்க்கின்றேன். நம்முடன் ஒன்றாக ஒட்டி உறவாடிய பல்வேறு சமயத்தவர்கள் இனத்தவர்களுடன் எத்தகைய அன்னியோன்னியமாகப் பழகினோம் – இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டோம் என்பதை எண்ணிப் பார்க்கின்றேன். பல்லின மத மக்களோடு வாழ்ந்து அவர்களின் பிள்ளைகளோடு ஒன்றாகப் படித்து விளையாடிய நாட்களையும் எண்ணிப்பார்க்கும்போது நாம் ஏன் அன்னிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் கேட்டோம் என்று வருந்தும் அளவுக்கு நாட்டின் நிலைமை மாறிவிட்டது. மீண்டும் அத்தகைய நிலை வருமா? அல்லது வரமாட்டாதா என்று என் உள்ளம் ஏங்குகின்றது. அது நிற்க!
சுதந்திரம் அடைந்தோம். அதையொட்டி அனேக அரசியற் கட்சிகள் பல்வேறு கொள்கைகளுடன் ஆரம்பமாகின. இனமத பேதமற்று இயங்கிய கட்சிகளே அதிகம். அந்த வகையில் இடதுசாரிக் கட்சிகளே முன்னிலை வகித்தன.
அரசியலில் தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட கட்சிகளில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸே முன்னிலை வகித்தது. 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆந்திகதி சுதந்திரம் அடையப் போகும் இலங்கையின் முழு அதிகாரம் பெற்ற பாராளுமன்றுக்கு உறுப்பினரைத் தெரிவதற்கு முன்கூட்டியே நடைபெற்ற தேர்தலில் அமரர்கள் ஜீ.ஜீ.பொன்னம்பலம் முஊ, சா.ஜே.வே. செல்வநாயகம் முஊ ஆகியோர் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி ஈட்டியபோதும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிளவு ஏற்பட்டது. திரு. செல்வநாயகம் அவர்களின் தலைமையில் புதிய ஒரு கட்சி, தமிழரசுக் கட்சி என்ற பெயரில் 1949ம் ஆண்டு ஆரம்பமாகி தொடர்ந்து 23 வருடங்கள் இயங்கியது. இவ்விரு தலைவர்களுக்கும், அவர்களின் கட்சித் தொண்டர்களுக்கும் இடையில் அபிப்பிராயபேதம் வளர்ந்திருந்த உச்சக்கட்டத்தில், 1972ல் இலங்கையின் அரசியல் சாசனத்திலும் மாற்றம் ஏற்பட்டது. இது தமிழ் மக்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று உணர்ந்த தமிழ் அரசுக் கட்சித் தலைவர் சா.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் காலப் போக்கில் தந்தை என்று அன்பாக பொது மக்களாலும் மூதறிஞர் என்ற கௌரவப் பட்டமும் வழங்கப்பட்ட நிலையில், அரசியலில் தனது பரம விரோதியாகிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் வீடுதேடிச் சென்று எடுத்த முயற்சி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியையும், தமிழரசுக் கட்சியையும் ஒன்றிணைய வைத்தது. அரசியலில் அன்று ஏற்பட்ட மாற்றம் தமிழ் மக்களுக்கு விடப்பட்ட சவாலுக்கு ஒப்பானதாகும்.
இந்நிகழ்ச்சி மிகப் பெரும் சாதனையாக உலகளாவிய ரீதியில் பாராட்டப்பட்டது மட்டுமின்றி தமிழர் விடுதலைக் கூட்டணியும் உருவாகியது. அதன் ஆரம்பகால உறுப்பினராக அன்று தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகிய நானும் இணைந்து கொண்டவன் என்ற பெருமை இருக்கிறது. அதனால் எனக்கும் சில பொறுப்புக்கள் உண்டு.
பல தடவைகள் என்னால் எடுத்துக்கூறப்பட்டவை, சுட்டிக்காட்டப்பட்டவை எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் பெருமளவில் அன்றைய சூழ்நிலையில ஊடகங்களால் வெளிப்படுத்த முடியவில்லை. எதிர்காலத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் பற்றி முன்கூட்டியே சிந்திப்பவன் நான் விளைவுகள் எதனையும் பொருட்படுத்தாமல் சரியென தோன்றுவதை தயங்காமல் வெளிக்காட்டுபவன் நான்.
ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களில் எவராலும் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய எம்மால் பல தடவை எடுத்துரைக்கப்பட்ட நல்லதோர் தீர்வு இருந்தும் எவரும் அதைப் பொருட்படுத்தவில்லை. நாம் குறிப்பிடுவது இந்திய முறையிலான அதிகாரப் பகிரவை இலங்கையில் அமுல்படுத்துவதே! ஏறக்குறைய 13 ஆண்டுகளாக எம்மால் வற்புறுத்தப்பட்டுவரும் இத்தீர்வு சம்பந்தமாக என்னால் 12.08.2006ல் துஏP அமைப்புக்கு எழுதப்பட்ட கீழே குறிப்பிட்ட கடிதத்தின் ஒரு பகுதி பூரண விளக்கத்தைத் தருகிறது. தயவுசெய்து இத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன்.
“எமது பிரச்சனைத் தீர்வுக்கு இந்திய மாதிரியான அரசியலமைப்பை வற்புறுத்திக் கேட்க நான் எவராலும் வாங்கப்பட்டவனோ அல்லது ஏவலாளியாகவோ செயற்படவில்லை. நான் அவ்வாறு சிந்திப்பதற்கு எவராலும் ஏற்கக்கூடிய சில நல்ல காரணங்கள் உண்டு. கடந்த 2 வருட காலத்தில் அனேகரை ஏற்க வைத்துள்ளேன். நியாயமாக சிந்திப்பவர்களுக்கு நான் கூறுவதில் அர்த்தம் உண்டு எனத் தோன்றும்.
முதலாவதாக, உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியாவில் இந்துக்களே கூடுதலாக வாழ்கின்றனர். உள்ளுரில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஏற்படும் நெருக்குவாரம் இருப்பதோடு, சில அயல்நாடுகளோடு கசப்புணர்வு இருந்தும் அந்நாட்டின் தலைவர் ஒரு இஸ்லாமியர். அனைத்து இந்திய மக்களாலும் நேசிக்கப்படுவதோடு, பெரிதாக மதிக்கப்படுபவர்.
இரண்டாவதாக, இரண்டு சதவீத சனத்தொகையைக் கொண்ட சீக்கியமக்களில் ஒருவர் பிரதம அமைச்சராக செயல்படுகின்ற டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள். இந்தியாவில் மிகவும் நேசிக்கப்பட்டு பெரும் மதிப்போடும் திகழ்பவர்.
மூன்றாவதாக, ஆளும் கட்சியாகிய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவியாக இருந்தும், பிரதமர் பதவியையே ஏற்க மறுத்த, பெருமைக்குரிய, நாட்டுமக்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.
இலங்கையர்களாகிய நாங்கள் இந்த 3 பெரும் பதவிகளுக்கு 3 பெரியார்களை தெரிவுசெய்த இந்திய மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உண்டு.
எமது மொழிகள், மதங்கள், கலாச்சாரம் முதலிய அத்தனையும் இந்திய நாட்டிலிருந்து பெறப்பட்டவையே. அத்துடன் எமது மூதாதையர்களும் இந்தியர்களே! எமது பழைய அரசியல் சாசனத்தை பிரித்தானிய (வெஸ்ட் மினிஸ்டர்) முறையில் ஏற்றுக்கொண்ட நாங்கள் இந்திய மாதிரியான ஒரு அரசியல் சாசனத்தை ஏற்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. அத்துடன் சமஷ்டி, ஒற்றையாட்சி ஆகிய பதங்களை எதிர்ப்பவர்களுக்கு சமஷ்டி முறையோ, ஒற்றையாட்சி முறையோ அல்லாத இந்திய அரசியலமைப்பு திருப்தியளிக்க வேண்டும்.
ஒரு புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி அமுல்படுத்த நாம் எவரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்தியாவில் விடுதலைப் புலிகளின் ஈழத்துக்கு ஆதரவு கொடுக்கும் சில சிறிய அரசியல் கட்சிகள் இருப்பதால் தமிழ்நாட்டவரின் ஆதங்கத்தை முற்று முழுதாக நிராகரிக்க முடியாது.
இந்திய மாதிரி என்றதும் தாம் அனுபவிக்கின்ற அதிகாரங்களிலும் பார்க்க கூடுதலான அதிகாரத்தை இலங்கை மாநிலங்களுக்கு வழங்க வேண்டுமென்று கோரும் உரிமையை தமிழ் நாட்டுச் சிறு கட்சிகளும் இழந்து விடும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையில் பிரிவினை ஏற்படுவதை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டாது என்ற உத்தரவாதம் இருப்பதோடு ஐக்கிய இலங்கைக்குள்ளே தீர்வு காணப்பட வேண்டும் என்று தொடர்ந்து இந்தியா கூறிவருவதால் விடுதலைப் புலிகளோ அன்றி வேறு தீவிர குழுக்களோ இந்திய மாதிரியான முறையை ஏற்க மறுக்க முடியாது.”
வீ. ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்
தமிழர் விடுதலைக் கூட்டணி