Ad Widget

U-turn இல்லை

கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் அனுபவங்களையும் ‘யு டேர்ண்’களையும் வைத்து, தம்மை எடைபோட வேண்டாமென, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமவீர கோரிக்கை விடுத்துள்ளார். ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

mangala-samara-veera-un

இவ்வாண்டுமார்ச் மாதத்தில் இடம்பெற்ற 28ஆவது மனித உரிமைகள் அமர்வில் வைத்து வெளியிடப்படவிருந்த இலங்கை மீதான அறிக்கையை, தள்ளிப் போடுவதற்கு அனுமதித்தமைக்காக, சபையின் அங்கத்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறிய அமைச்சர் மங்கள, தனது சீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்தவும் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர்,அவரது அலுவலகம் உட்பட சர்வதேச சமூகத்துடனான தனது தொடர்புகளை மீளப் புதுப்பிக்கவும் அர்த்தமுள்ள நல்லிணக்கம், ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்துதல், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி, முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை அடையவும் இந்த இடைவெளியானது இலங்கைக்குத் தேவையானதாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தலில், நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வெற்றியானது, தேசிய அரசாங்கமொன்றை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வாய்ப்பினை வழங்கியதாகத் தெரிவித்த அமைச்சர், பிரிவின் இரு தரப்பினதும் (தமிழர், சிங்களவர்) அடிப்படைவாதிகள் தோற்கடிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் மிதவாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.

‘நல்லாட்சிக்கான செயற்பாடுகளைக் கொண்டுநிறுத்துவதை உறுதிப்படுத்தும் முகமாக, செப்டெம்பர் முதலாம் திகதியன்று நாடாளுமன்றம், எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான ஆர். சம்பந்தனை பொருத்தமான முறையில் தெரிவு செய்தது’ எனக் குறிப்பிட்ட அமைச்சர், ‘எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் நியமனம் அதேபோல், ஜனவரியில் 44ஆவது பிரதம நீதியரசர் நியமனம் ஆகியன, புதிய இலங்கையில் தொடர்பற்ற விடயங்களான இனம், சமயம், வகுப்பு, பால்நிலை ஆகியன, பொருத்தமான விடயங்களுக்கான வாய்ப்பை எவருக்கும் மறுக்காது என்ற தெளிவான செய்தியை வழங்குகின்றன’ எனத் தெரிவித்தார்.

‘2009ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து, முரண்பாட்டின் முடிவினைத் தொடர்ந்து கொண்டு செல்லப்பட்ட குறுகிய நோக்கமுடைய கொள்கைகள், வெற்றியைக் கொண்டாடும் அணுகுமுறை காரணமாக, முரண்பாட்டுக்குப் பின்னரான நல்லிணக்கமானது, விலகிச் சென்றது. தேசிய அரசாங்கமானது, நல்லிணக்கத்தைப் புதியதாகவும் அதேபோல், அவசரமான முன்னுரிமையாகவும் கொண்டு அணுகிறது’ என்று தெரிவித்த அவர், நீதியை உறுதிப்படுத்தவும் பயங்கரவாதத்தின் காரணங்களை நீக்கவும் நாட்டு மக்களின் நீண்டகால வேதனைக்கான தாங்கக்கூடிய சமாதானமொன்றை அடைவதற்குமான ஒரே வழியாக, இவ்வழியே காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். நல்லிணக்கமானது ஒரு செயன்முறையெனவும், சிலர் பொறுமையற்றுக் காணப்படுவதாகவும், அவர்கள் அவ்வாறு பொறுமையற்று இருப்பதற்கான உரிமையைப் புரிந்து கொள்வதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், ஆனால் இந்தச் செயன்முறையானது கவனமாகத் திட்டமிடப்பட வேண்டுமெனவும் இத்தேசமானது பல முறைகள் இடறியுள்ள நிலையில், மீண்டுமொருமுறை தோல்வியடைய அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.

‘உண்மையைக் கண்டுபிடித்தல், நீதி, இழப்பீடு வழங்கல், மீள இடம்பெறாதிருத்தல், மீள இடம்பெறாதிருத்தல் உண்மையில் அர்த்தமுள்ளதாக மாறுவதற்கு, தமிழ் மக்களின் வேதனைகளுக்கான ஓர் அரசியல் தீர்வு ஆகிய பரந்த விடயங்களைக் கொண்டதாக நல்லிணக்கச் செயன்முறை காணப்பட வேண்டுமென்பதை இலங்கை அரசாங்கம் அடையாளம் கண்டுகொள்கிறது’ எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி, சுயாதீன தேசிய நீதிப் பொறிமுறைகளூடாகபொறுப்புக்கூறல் விடயங்களை எதிர்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த அவர், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும் நீதித் துறையின் மீதான இந்நாட்டைச் சேர்ந்த அனைத்துச் சமூகங்களின் நம்பிக்கைகளைக் கட்டியெழுப்பவும், பொறுப்புக்கூறலென்பது அவசியமானது எனத் தெரிவித்தார்.

அரசாங்கம் எடுக்கவுள்ள பொறுப்புக்கூறல் பொறிமுறைகள், பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட அனைத்துப் பிரிவினரைiயும் உள்ளடக்கி, அவர்களின் ஆலோசனைகளைப் பெறும் விரிவான செயற்பாடுகள் மூலமாக உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் மங்கள, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச இணைப்பாளர்களின் நிதியியல், பொருள், தொழில்நுட்ப உதவிகள் பெறப்படுவதற்கான சுதந்திரத்தை, ஒவ்வொரு பொறிமுறையும் கொண்டிருக்குமெனவும் தெரிவித்தார். தவிர, பரிஸ் நெறிமுறைக்கேற்ப தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவைப் பலப்படுத்தவும் கட்டாயப்படுத்தப்பட்ட காணாமல் போதலிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனத்தில் உடனடியாகக் கைச்சாத்திடவும் மரண தண்டனையை நீக்கும் பொருட்டு அதனை தற்காலிகமான தடையில் தொடர்ந்து வைத்திருக்கவும் உடலகம, பரணகம போன்ற முன்னைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை இம்மாத இறுதிக்குள் வெளியிடவும் காணாமல் போனோரின் குடும்பத்தினருக்கு தற்காலிய நிவாரணத்தை வழங்கும்பொருட்டு, காணாமல் போனமைக்கான சான்றிதழை வழங்கவும் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து இராணுவத்தை நீக்கவும் பாதுகாப்புத் துறை சீரமைப்பை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்

சித்திரவதை, வன்புணர்வு, பாலியல் வன்முறை, ஏனைய மனித உரிமை மீறல்கள் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன எனவும் அவற்றில் ஈடுபடுபவர்கள் விசாரணை செய்யப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்படுவர் என்பதையும் பாதுகாப்புப் படைகளுக்குத் தெளிவான பணிப்புரை விடுப்பதையும் தெரிவித்த அமைச்சர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மீளாய்வு செய்யப்பட்டு நீக்கப்படுவதோடு, அதற்குப் பதிலாக பயங்கரவாதத்துக்கெதிரான சட்ட நடவடிக்கை கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார். தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சமூகங்களுக்குமான உளவியல் ரீதியிலான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை, தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் மேற்கொண்டுவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டில் வாழும் இலங்கையின் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்தவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதும் அரசாங்கத்தின் அமைதியைக் கட்டியெழுப்பும் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் அவர்களின் உதவிகளைக் கோருவதற்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், அதன் ஒரு பிரிவாக, 12 அமைப்புகளையும் 424 பேரையும் பட்டியல்படுத்தி, கடந்தாண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் மீளாய்வு நிறைவை எட்டிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ‘அதன் காரணமாக, பொறுப்புக்கூறல் செயன்முறை தொடர்பாக நம்பிக்கையீனங்களைக் கொண்டிருப்போருக்கு, அச்சமடைய வேண்டாமெனத் தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வகையான செயற்பாடொன்று, பாரபட்சமின்றி பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றும் என்பதோடு, இராணுவப் படைகளின் நற்பெயரையும் மீளக் கொண்டுவரும்’ என அமைச்சர் தெரிவித்தார்.

அத்தோடு, ‘நம்பிக்கையவற்றைவர்கள், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் அனுபங்களையும் யு டேர்ண் களையும் வைத்து, எம்மை எடை போட வேண்டாம். எங்களுடைய எதிர்காலத்தை எங்களுடைய நம்பிக்கைகள், குறிக்கோள் ஆகியவற்றைக் கொண்டு நாம் வடிவமைப்போம், வரையறுப்போம், உருவாக்குவோம். கடந்த காலப் பயங்களாலும் தவறான எண்ணங்களாலும் நாம் நிறுத்திவைக்கப்பட வேண்டாம்’ எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts