Ad Widget

SLFP வெற்றியீட்டினால் மஹிந்தவிற்கு பிரதமர் பதவி இல்லை: தேர்தலில் நடுநிலை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டினாலும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கும் ஊடகங்களுக்கும் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுத் தலைவர்கள் பொதுவாக விசேட உரைகளை ஆற்றும் போது அவற்றை ஏற்கனவே எழுதி டெலி ப்ரொம்டர் ஊடாக வாசிப்பது வழமை என்ற போதிலும், ஜனாதிபதியின் நேற்றய உரை நேரடியாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு தரப்பினரும் தம்மை கடுமையாக விமர்சனம் செய்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

துஸ்டன், காட்டிக் கொடுத்தவன், துரோகி என தம்மைப் பலர் விமர்சனம் செய்ததாகவும், அவ்வாறான குற்றச்சாட்டுக்களை ஊடகங்களில் வெளியிட ஊடக சுதந்திரம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தம்மை விமர்சனம் செய்வோர், நாட்டின் ஜனநாயகம் தற்போது எவ்வாறான நிலைமையில் காணப்படுகின்றது என்பதனை நடைமுறைச் சாத்தியாப்பாட்டுடன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

இவ்வாறு கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதியை விமர்சனம் செய்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்பதனை நினைத்துப் பார்க்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ எதிர்காலத்தில் தொடர் தோல்விகளை சந்திப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் பதவியை ராஜினாமா செய்தால் நல்லது என தாம் பிரதமரிடம் கூறியதாகவும் பிரதமருக்கு நாட்டில் நல்ல பெயர் காணப்படுவதாகவும் இதனால் மத்திய வங்கியின் ஆளுனரை பதவி விலகுமாறு கோருமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்குவதனை தாம் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு மஹிந்த ராஜபக்ஸவும் பிழையில்லை, இந்தப் பிரச்சினைக்கான மூல காரணம் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயர்தனவின் தேர்தல் முறைமையினலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைமையிலேயே பிரச்சினை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

2010ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியினால் வெற்றியீட்ட முடியவில்லை எனவும், அதற்கு முன்னர் வெற்றியீட்டிய ஆசனங்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த தோல்வியைத் தழுவுவார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய தமக்கு எவ்வித தேவையும் கிடையாது எனவும், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்குவதனை தாம் எழுத்து மூலம் எதிர்த்தாகத் தெரிவித்துள்ளார்.

தமது கொள்கைகளை முன்னெடுக்கும் பாராளுமன்றமொன்றை அமைத்துக் கொள்வதே தமது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதம் 8ம் திகதி இந்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே மக்களிடம் வாக்கு கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

கட்சி எது என்பது பற்றி கவலைப்படவில்லை எனவும், ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் கவிழ்வதனை தாம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்தே பாரர்ளுமன்றம் கலைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டு வந்து மஹிந்தவை தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றிற்கு கொண்டு வந்து, பிரதமர் பதவி வழங்குவதே மஹிந்த ஆதரவு தரப்பின் திட்டமாக அமைந்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விமர்சனங்களை தாம் பாராட்டுவதாகவும் விமர்சனங்களை தடுக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை வெற்றியீட்டும் அரசாங்கமொன்றை தமக்கு தேவையில்லை எனவும் ஜனவரி 8ம் திகதி அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்வதே தமது நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவுடன் எந்தவிதமான உறவும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த குறித்த தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ எப்படியாவது பிரதமராக முயற்சிப்பதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றியீட்டினால் பிரதமராக நியமிக்க வேண்டியளவு சிரேஸ்ட உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என அ வர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலின் போது சுயாதீனாமாக இருக்கப் போவதாகவும் எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான முறையில் தேர்தல்களை நடாத்த பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

“உங்களுக்காக வென்றெடுக்கப்பட்ட ஜனநாயகத்தை இல்லாமல் செய்து கொள்ள வேண்டாம். ஜநாயகத்தை துஸ்பிரயோகம் செய்ய வேண்டாம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts