Ad Widget

Omicron கண்டறியப்பட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்கவில்லை!!

புதிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடை செய்யப்பட்ட ஆறு தென்னாபிரிக்க நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் கடந்த 14 நாட்களாக நாட்டிற்குள் பிரவேசிக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, தென்னாபிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, லெசோதோ மற்றும் சுவாசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கடந்த 14 நாட்களாக நாட்டிற்கு வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் புதிய பிறழ்வான Omicron மாறுபாடு காரணமாக அவர்கள் நேற்று நள்ளிரவு முதல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேநேரம், கடந்த 14 நாட்களில் இந்த நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தவிர வேறு எவரும் நாட்டிற்கு வந்துள்ளார்களா என்பது குறித்து உரிய திணைக்களங்கள் ஆராயும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கேற்ப சுகாதாரத்துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட 6 நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தடையும் இல்லை என்று அமைச்சர் கூறினார். விசா வழங்கும்போது சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்களா என்பதை அதிகாரிகள் பரிசோதிப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 90% பேர் இதுவரை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்றும் சுகாதார பரிந்துரைகளுக்கு இணங்க புதிய வழமையான திட்டத்தின் கீழ் மக்களைப் பாதுகாக்கவும் நாட்டைப் பராமரிக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

Related Posts