984 மில்லியன் ரூபா செலவில் குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

வடக்கு மாகாணத்திலுள்ள கடல் கடந்த தீவுகளுக்கான பிரதான போக்குவரத்து நுழைவாயிலாகத் திகழும் குறிகாட்டுவான் இறங்குதுறையை நவீன மயப்படுத்தும் பாரிய புனரமைப்புப் பணிகள் இன்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

​போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, இலங்கை அரசாங்கத்தின் 984 மில்லியன் ரூபா நேரடி நிதியொதுக்கீட்டில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

​போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களின் விசேட பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

​இந்நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ க.இளங்குமரன், கௌரவ ச.ஸ்ரீபவானந்தராஜா, கௌரவ ஜெ.றஜீவன் ஆகியோருடன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், வடக்கு மாகாணக் கடற்படைத் தளபதி மற்றும் யாழ். மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

​கடந்த காலங்களில் இவ்வாறான பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் வெளிநாட்டுக் கடன்கள் அல்லது உதவித் திட்டங்களின் மூலமே முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆனால், இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில்:

​முழுக்க முழுக்க மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு உள்நாட்டு நிதியிலேயே இது செயல்படுத்தப்படுகிறது.

​அந்நியக் கடன்களின்றி, நாட்டின் சொந்தப் பொருளாதார பலத்தில் முன்னெடுக்கப்படும் ஒரு முன்மாதிரித் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.

​நெடுந்தீவு மற்றும் ஏனைய தீவுகளுக்குப் பயணம் செய்யும் மக்கள், குறிப்பாக நெடுந்தீவு வாசிகள் தமது படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதில் நீண்டகாலமாகப் பெரும் சவால்களை எதிர்கொண்டு வந்தனர்.

​”இந்த புனரமைப்புப் பணியின் ஊடாக படகுகளை நிறுத்தி வைப்பதற்கான வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், தீவக மக்களின் போக்குவரத்து இடர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படும்,” என அமைச்சின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

​திட்டமிடப்பட்டுள்ள கால அட்டவணையின்படி, குறிகாட்டுவான் இறங்குதுறையின் அனைத்துப் புனரமைப்புப் பணிகளும் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்படவுள்ளது.

​இந்த அபிவிருத்தித் திட்டமானது யாழ். தீவகப் பகுதியின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts