96% பிரதேசங்களிலிருந்து வெடிபொருட்கள் அகற்றல்

வடமாகாணத்தில் 96 சதவீத பிரதேசங்களிலிருந்து வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்.

illangovan

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இளங்கோவன் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

யுத்தம் அதிகம் இடம்பெற்ற பிரதேசங்களில் மாத்திரமே வெடிபொருட்களை அகற்ற வேண்டியுள்ளது. அந்த பிரதேசங்களில் அதிகளவான வெடிபொருட்கள் இருப்பதால் அவற்றை அகற்றுவதில் இடர்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. அவ்வாறான இடங்களில் மெதுவான முன்னெடுப்புக்கள் மூலமே வெடிபொருட்களை அகற்ற முடியும் என கூறினார்.

இதேவேளை, வடமாகாணத்தில் 97 சதவீதமான பிரதேசங்களுக்கு மின்சார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மிகுதி 3 சதவீதமான பிரதேசங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், விடுதலைப்புலி போராளிகளில் 95 சதவீதமானவர்கள், சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், மிகுதி போராளிகள் விரைவில் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

யுத்த காலத்தில் தேசிய உற்பத்தி பங்களிப்பில் பூச்சி நிலையில் இருந்த வடமாகாணம் தற்போது 4 வீதம் என்ற நிலைக்கு முன்னேறியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.