Ad Widget

700 ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன – முதலமைச்சர் சி.வி

வட மாகாண சபைக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் வகையில் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 700 பேர் நியமிக்கப்படவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, இன்று புதன்கிழமை, வட மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் பிரதேச சபை செயலாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்களாக 29 பேரும், திணைக்களங்களின் நிர்வாக உத்தியோகத்தர்களாக 25 பேரும் என மொத்தம் 54 முகாமைத்துவ உதவியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

326 பட்டதாரிப் பயிலுநர்கள் மத்திய அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட பெயர்ப் பட்டியலின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு நியமிக்கப்படவுள்ளனர். பட்டதாரிப் பயிலுநர்களாக ஏற்கெனவே, வட மாகாண சபையில் கடமையாற்றி வந்த 15 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

முகாமைத்துவ உதவியாளர் நியமனத்துக்காக, மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 47 பேருக்கும் திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 126 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும்,சாரதிகளாக 97 பேரும் விளையாட்டு உத்தியோகத்தர் பதவிக்கு 24 பேரும், கலாச்சார உத்தியோகத்தர்களாக 11 பேரும் நியமிக்கப்படவுள்ளனர்.

Related Posts