Ad Widget

70 இலட்சம் பெறுமதியான கொள்ளையிடப்பட்ட நகைகள் பொலிஸாரால் மீட்பு

யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளையிடப்பட்ட சுமார் 70 இலட்சம் பெறுமதியான நகைகளை கைப்பற்றியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்துள்ளதாக யாழ்மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ணவின் வழிநடத்தலில் யாழ் பொலிஸ் நிலைய தலமை பொலிஸ் பரிசோதகர் வீரசிங்க தலமையில் அமைக்கப்பட்ட விஷேட பொலிஸ் அணியினரே மேற்படி கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.

கடந்த காலங்களில் குற்ற மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தொடர்ச்சியாக கண்காணித்து வந்ததின் அடிப்படையில் கடந்த 11ஆம் திகதி சந்தேகத்துக்கு இடமான வகையில் கார் ஒன்றை சோதனையிட்ட போது அவற்றில் கொள்ளையிடப்பட்ட நகைகள் சில மீட்கப்பட்டிருந்தன. இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைது செய்திருந்ததுடன் அவரது காரையும் கைப்பற்றியிருந்தனர்.

மேலும் தொடர்ச்சியாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் அடிப்படையில் மேலதிகமாக நகைகள் மீட்கப்பட்டிருந்தன. இவ் நகைகள் கடைகளில் விற்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு வரை சென்று அவற்றை மீட்டிருந்ததாகவும் அவற்றில் பல நகைகள் உருக்கப்பட்ட நிலையில் கட்டிகளாகவும் சில ஆபரணங்களாகவும் மீட்கப்பட்டதாகும் பொலிஸ் அதிகாரி தெரிவித்திருந்தார். அத்துடன் மோசடியான வகையில் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட வங்கி கணக்கு புத்தகங்கள் நான்கையும் கைப்பற்றியுள்ளதாகவும் தொடர்ச்சியான விசாரனையின் மூலம் மேலும் ஒருவரை நேற்றுமுன்தினம் கைது செய்திருந்ததாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.

இவ்வாறு மீட்கப்பட்ட நகைகள் மொத்தம் 128 பவுண்கள் எனவும் அவற்றின் மொத்த பெறுமதி சுமார் 70 இலட்சத்திற்கும் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இக் கைது நடவடிக்கையினால் பல கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பான விசாரனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாகவும் கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்டவற்றையும் நீதிமன்றில் முட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் யாழ்மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.

Related Posts