Ad Widget

600 பொலிஸாரின் கொலையுடன் தொடர்புபட்டவர் ராம்

கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி, சமூகமயப்படுத்தப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான ராம் என்பவர், பயங்கரவாத விசாரணைப்பிரிவின் (ரி.ஐ.டீ) காவலில் உள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அவர், திருக்கோவில் – தம்பிலுவில் பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிலிருந்த போது 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று (24), வான் ஒன்றில் வந்த இனந்தெரியாதோர் கடத்தப்பட்டார் என்று அவருடைய மனைவி முறைப்பாடு செய்திருந்தார்.

புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா அம்மான் (விநாயகமூர்த்தி முரளிதரன்), அவ்வமைப்பிலிருந்து விலகியதையடுத்து, ராம், தனக்குச் சார்பான உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் தப்பிச்சென்றுள்ளார்.

அதன் பின்னரே, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு ஆயுதப் பிரிவுக்குப் பொறுப்பாக பிரபாகரனால், ராம் நியமிக்கப்பட்டார்.

ஆனையிறவு மற்றும் பூநகரி இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தலைமைவகித்த அவர், கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் குழுவொன்றைக் கடத்தி அதில் 600 பொலிஸாரை படுகொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, யால தேசிய சரணாலயத்தில் இடம்பெற்ற பல்வேறான தாக்குதல் சம்பவங்களுடன் இவர் தொடர்புடையவர் என்றும் அறியமுடிகின்றது.

இராணுவத்தினரால் 2009ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட அவர், கிழக்கு மாகாண இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது தப்பியோடிவிட்டார். நான்கு நாட்களுக்கு பின்னர் இராணுவத்தினரால் திருகோணமலையில் வைத்து மீண்டும் கைதுசெய்யப்பட்ட ராம், 2013ஆம் ஆண்டில் விடுதலையாகி, திருமணம் முடித்த நிலையில், தம்பிலுவில் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளதுடன் விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை ஈட்டி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts