Ad Widget

நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் கைதி தற்கொலை?

நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டுக்குள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை(20) மாலை தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இராசையா பிரதீபன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்ற தாபரிப்பு வழக்கு ஒன்றின் எதிராளியான குறித்த நபர் வழக்கு தவணைகளில் நீதிமன்றத்துக்குச் சமூகமளிக்காததால் அவருக்கு எதிராக 18ஆம் திகதி நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, குறித்த நபர் நெல்லியடிப் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை(20) கைது செய்யப்பட்டு, பொலிஸ் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மண்ணெண்ணெயை ஊற்றி தனக்குத் தானே தீ மூட்டிகொண்டுள்ளார்.

தீயை அணைத்த பொலிஸார் சந்தேகநபரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறைக்கூண்டுக்குள் எவ்வாறு மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டி என்பன கொண்டுவரப்பட்டன என்பதை கடமையிலிருந்த உபசேவை அதிகாரி, நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர், காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Posts