Ad Widget

53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர்!!

வரலாற்றுச் சான்றுகளாக முத்திரை சேகரித்தல், நாடுகளின் நாணயங்ள் சேகரித்தல் ஏன் பேனா சேகரிப்பதும் உண்டு இன்னும் சிலர் லேஞ்சியினை சேகரிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் வித்தியாசமான சித்தனையில் வித்தியாசமான பொருள் ஒன்றைச் சேகரித்து யுத்தகாலம் முதல் இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றார்.

தனது தொழில் நிமித்தம் பல நாடுகளின் பணியாளர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிட்டியதனால் அத்தனை நாடுகளினதும் ஓர் பொருளை சேகரிக்க எண்ணி இன்று 35 ஆண்டுகளிற்கு முன்பிருந்து ஓர் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் அத்தனை நாட்டுப் பணியாளர்களிடமிருந்தும் அந்த நாடுகளில் பாவனையில் இருக்கும் தீப்பெட்டிகளை கோரிப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் கோண்டாவிலை வசிப்பிடமாக கொண்டபோதும் அநுராதபுரம் மிகிந்தலையை சொந்த இடமாக கொண்டவர். என்பதனால் 1977 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாப் பயணிகளாக வருபவர்களிற்கு வழிகாட்டியாக தொழில் புரிந்துள்ளார். இவ்வாறு தொழில் புரியும் காலத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடத்தில் இருந்து அவர்களது நாட்டின் தீப்பெட்டி ஒன்றை நினைவாக பெற்றுக்கொண்டு அதனை சேகரித்துள்ளார். இந்த நிலையில் இலங்கையில் 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் உச்சம் பெற்றதோடு முழுமையாக யாழ்ப்பாணம் கோண்டாவிலிலேயே வாழ்கின்றார்.

இவ்வாறு கோண்டாவிலிற்கு கொண்டுவந்த சகல நாட்டின் தீப்பெட்டிகளையும் பேணிப் பாதுகாக்கும் அதேநேரம் 1995 ஆம் ஆண்டு யாழில் இருந்து இடம்பெயர்ந்து வன்னிக்குச் சென்று வன்னியிலும் பல இடப்பெயர்வுகளைச் சந்தித்த சமயம் வன்னியில் 1997 ஆம் 98 ஆம் ஆண்டு காலத்தில் சாதாரணமாக தீப்பெட்டி 2 ரூபாவாக இருந்தபோதும் தடையின் காரணமாக 15 ரூபா முதல் 20 ரூபா வரை சென்றபோதும் இந்த தீப்பெட்டிகளை பாவனைக்கு எடுக்கவே இல்லை என தனது பழைய நினைவுகளை மீட்டுகின்றார்.

இவ்வாறு 1977 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டுவரையில் நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்தபோதும் பல இடப்பெயர்வுகள் , மழை , தண்ணியென அனைத்திலும் அகப்படாது பாதுகாத்த நிலையில் இன்றும் 53 நாடுகளின் தீப்பெட்டிகளை முழுமையாகவும் மேலும் சில தீப்பெட்டிகள் சேதமடைந்த நிலையிலும் பராமரிக்கின்றார். இவ்வாறு பேணிவரும் தீப்பெட்டிகளை ஏதொ ஒரு வகையில் பேணி பராமரிப்பது மட்டுமன்றி இதனை தொடர என்ன செய்யலாம் என்ற கேள்வியை எழுப்புவதோடு இவற்றினை நீண்டகாலமாக பாதுகாத்து வரும் விடயம் அறிந்த சிலர் ஆச்சரியமாக பார்த்தாலும் மேலும் சிலர் எள்ளி நகையாடியவர்களும் உண்டு என்கின்றார்.

இவ்வாறு ஓர் வித்தியாசமான சிந்தனையுடன் இருப்பவரிடம் பெயர் , முகவரி , வயதினைக் கேட்டபோது எனது முயற்சி எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று விரும்புகின்றேனே அன்றி இதனால் நான் பெயர் எடுக்க விரும்பவில்லை எனது வாழ் நாளில் இழந்தவை அதிகம் இதன் மூலம் எதனையும் பெற விரும்பவில்லை எனத் தெரிவித்ததோடு தீப்பெட்டிகளை நேர்த்தியாக படமாக்குங்கள் ஆனால் என்னை விட்டுவிடுங்கள் எனத் தெரிவித்ததோடு இது அடுத்த தலைமுறை மாணவர்களிற்கு ஏதோ ஒரு வழியில் பயன்படுமாக இருந்தால் நான் இவ்வளவு காலமும் பாதுகாத்த ஒன்றிற்கு பெறுமதி கிடைத்ததாக கருதுவேன்.

எனக்கு பிற்காலத்தில் என்னால் சேகரிக்கப்பட்ட இப் பொருட்களை உள்ளூரில் உள்ள ஓர் பொது அருங்காட்சியங்கள் ஒன்றில் அல்லது பொதுவான இடத்தில் பார்வைக்கு உகந்த்தாக மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை அதற்கும் முயற்சிப்பேன் . என்றார்.

Related Posts