48 சிறிய குளங்கள் இவ்வாண்டு புனரமைப்பு

Kulamகமநல சேவைகள் அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்த ஆண்டு 48 சிறிய குளங்கள்,வாய்க்கால்கள் மற்றும் 3 பிராந்திய கமநல சேவை நிலையங்களும் புனரமைக்கப்படவுள்ளன என்று யாழ். மாவட்ட செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
கமநல சேவைகள் அபிவிருத்தித் திணைக்களத்தினால் கடந்த வருடம் விவசாயிகளுக்குப் பல்வேறுபட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விவசாயிகளுக்குக் கடந்த ஆண்டு 23 ஆயிரத்து 667.5 ஏக்கர் நிலப்பரப்புக்குரிய உரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. 76 விவசாயிகளுக்கு இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

5 ஆயிரம் விவசாயிகளுக்கு மண்வெட்டியும், பாதுகாப்பு வேலி அமைப்பதற்காக 820 சுருள் முட்கம்பியும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 275 நீர் வெளியேறும் வாய்க்கால் புனரமைப்புக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2012 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட வகையில் 3 பிராந்திய கமநல சேவை நிலையங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. அதே போன்று இந்த ஆண்டும் 3 பிராந்திய கமநல சேவை நிலையங்களை புனரமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 25 குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் புனரமைப்புக்குத் திட்டமிடப்பட்டு அவை நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன அதேசமயம் இந்த ஆண்டு 48 குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் புனரமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.