ஆறாயிரம் ஏக்கர் தமிழர் நிலத்தினை அபகரிக்கும் அரசாஙகத்தின் முயற்சிக்கு எதிராக மே 29 ம் திகதி இடம்பெறவுள்ள பாரிய மக்கள் போராட்டத்திற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும் என இலங்கை தமிழரசுகட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரிந்துவிட்டது உடைந்துவிட்டது என சொல்கின்ற செய்திகளை எல்லாம் கடந்த காலத்திலே நான் மறுத்துவந்திருக்கின்றேன்.
நாடாளுமன்றத்தின் இறுதிவரைக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பாக இயங்கினோம் நாடாளுமன்ற தேர்தலிலே அவர்கள் தனித்து போட்டியிட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலிலே தனித்து போட்டியிடக்கூடாது இந்த தேர்தலில்தான் தனித்து போட்டியிடவேண்டும்.
இந்த வேளையிலே நாங்கள் சொன்னதுதான் சரி அவர்கள் சொன்னது பிழை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க விரும்பவில்லை நாங்கள் சேர்ந்து இயங்கவேண்டிய காலம் நேரம்.
மிகவும் விசேடமாக எங்களுடைய நிலங்களிலே 6000 ஏக்கர் பறிபோகின்ற சூழ்நிலை எழுந்திருக்கின்றது.
நான் ஏற்கனவே அதற்கான ஒரு அறை கூவலை விடுத்திருக்கின்றேன், மீண்டும் நான் மக்கள் ஆணையுடன் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு கோரிக்கையை முன்வைக்கவிரும்புகின்றேன்.
2025 மார்ச் மாதம் 28ம் திகதி பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி பிரசுரத்தை உடனடியாக மீளப்பெறுமாறு மக்கள் ஆணையோடு கோருகின்றோம்.
அது உடனடியாக மீளப்பெறவேண்டும் மே 28 வரை அரசாங்கத்திற்கு காலக்கெடுவை வழங்குவதாக நான் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றேன்.
மற்ற தமிழ் கட்சிகளிற்கு ஒரு அன்பான வேண்டுகோள் அரசாங்கம் இந்த வர்த்தமானியை மீளப்பெறாமலிருந்தால் மே 29ம் திகதி அதற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டமொன்றை முன்னெடுப்போம் அனைத்து கட்சிகளும் அதற்கு இணைந்து வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இது இலங்கை தமிழரசுகட்சி பொதுச்செயலாளராக நான் விடுக்கும் அழைப்பாகயிருந்தாலும் கூட பொதுவாக மக்கள் சார்பாக விடுக்கப்படுகின்ற அழைப்பாக ஏற்று ஒரு கட்சி விடுக்கின்ற வேண்டுகோளாக அதனை கருதாமல் பொதுவாக அனைவரும் ஒன்றுசேர்ந்து அதனை செய்யவேண்டும் ஆதற்கு முன்னர் அரசாங்கம் அந்த வர்த்தமானியை மீளப்பெறவேண்டும் இல்லாவிட்டால் பாரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம்.நிலம் அழிந்தால் அனைத்தும் அழிந்துபோகும்.