47 வயதில் முதல் முறையாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பம்!

NIC-nadamadum-sevaiயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 47 வயதான நபரொருவர் முதற்தடவையாக தேசிய அடையாள அட்டையைப் பெற விண்ணப்பித்துள்ளதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் – நல்லூர் – கோண்டாவில், ஸ்டேசன் வீதியில் வசிப்பவர் சிவபாதசுப்ரமணியம்.

இவர் தனது 47வது வயதில் முதல் தடவையாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளார்.

கடந்த 23ம் திகதி யாழ். நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கும் நடமாடும் சேவையில் சிவபாத சுப்ரமணியம் இந்த விண்ணப்பத்தை கையளித்துள்ளார்.

கஃபே இயக்கம், மனித உரிமைகளுக்கான கேந்திரம் மற்றும் ஆட்பதிவு திணைக்களம் என்பன இணைந்து அடையாள அட்டை மற்றும் வேறு அடையாள ஆவணங்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த நடமாடும் சேவையை ஏற்பாடு செய்திருந்தன.

இந்தநிலையில் பல வருடங்களாக தன்னால் எதிர்பார்க்கப்பட்ட சேவை ஒன்றை செய்துகொள்ள முடிந்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதாக அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த சிவபாதசுப்ரமணியம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

கஃபே இயக்கம், மனித உரிமைகளுக்கான கேந்திரம் மற்றும் ஆட்பதிவு திணைக்களம் என்பன செய்த விளம்பரத்தின் மூலம் நடமாடும் சேவை குறித்து அறிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் 500 ரூபாவிற்கு கூலி வேலை செய்யும் தன்னால் சாதாரண நடைமுறையில் தேசிய அடையாள அட்டை பெற முடியாது போனதாகவும் ஆனால் இந்த நடமாடும் சேவைக்கு வந்து இலவசமாக புகைப்படம் எடுத்து தேவையான ஆவணங்களை வழங்கி ஒரே நாளில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடிந்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தன்னிடம் தற்காலிக அடையாள அட்டையே உள்ளதாகவும் அதனை பயன்படுத்தி கடந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது போனதாகவும் சிவபாத சுப்ரமணியம் இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

வட மாகாண மக்களுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் வேறு ஆவணங்களை பெற்றுக் கொடுக்கும் நடமாடும் சேவை ஜூலை 9ம் திகதி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது யாழ். மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்று வருகிறது.