Ad Widget

41வது இலக்கிய சந்திப்பை தமிழ் படைப்பாளிகள் புறக்கணிக்க வேண்டும்: எஸ்.சஜீவன்

sajeepanயுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த அரசுக்கு நன்றி செலுத்தும் முகமாக யாழில் நடைபெறவுள்ள இலக்கிய சந்திப்பினை தமிழ், மலையக, முஸ்லீம் படைப்பாளிகளை புறக்கணிக்குமாறு வலி. வடக்கு மீள்குடியேற்ற தலைவரும், வலி. வடக்கு பிரதேச சபை உப தலைவருமாகிய சண்முகலிங்கம் சஜீவன் வேண்டுகோள்’ விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் 41வது இலக்கிய சந்திப்பு என்ற ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் தோல்வியடைந்த பொழுது, அரசிற்கு நன்றியும், பாராட்டுதலும் தெரிவித்து தலித் முன்னணியினர் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர்.

வன்னியில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் மனித படுகொலையின் குருதி மணமும், அவலக்குரல்களும் தமிழர்களின் மனங்களைவிட்டு இன்னும் மறையாத நிலையில், தமிழர்களின் அரசியல், வாழ்வுரிமை, கலை, பண்பாட்டு கூறுகளை சிதைக்கும் நடவடிக்கைகளில் அரசு மும்முரமாக இறங்கியுள்ளது.

அத்துடன், தமிழ் அரசியல்வாதிகளை வைத்தே தமிழர்களிற்கு பிரச்சனையில்லையென்ற அபிப்பிராயத்தை உருவாக்குதல், தமிழர்களின் பாரம்பரிய பூமியான ஒன்றிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரித்ததுடன், குடிசன பரம்பலை சிதைக்கும் வகையிலான சிங்கள குடியேற்றங்கள், பண்பாட்டு வேர்களின் மீது நிகழ்த்தப்படும் நுண்தாக்குதல்கள், மத தலங்களை அழித்தல் என எல்லா அடையாளங்களையும் இல்லாதொழிப்பதற்கான அரசின் நடவடிக்கையியே இது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், சட்டத்திற்கு அப்பாலான ஆட்சி, ஊடக அடக்குமுறைகள், ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் மீதான அடக்குமுறை என்பவற்றின் மீது போர்த்தப்படும் பல்வேறு திரைகளிலொன்றாகவே இந்த சந்திப்பையும் நோக்க வேண்டியுள்ளது.

ஏனெனில், யார் யாரெல்லாம் இலக்கிய சந்திப்பின் ஏற்பாட்டளர்களாகவும், அமைப்பாளர்களாகவும் உள்ளார்கள் என்பதிலிருந்து அதனை புரிந்துகொள்ள முடிகிறது.

இதனை உறுதிசெய்யும் விதமாகவே நடைபெற்ற சம்பவங்களும் அமைந்துள்ளன. சந்திப்பின் உள்ளடக்கம் இலங்கை அரசை ஆதரிப்பதாகும் என்ற உண்மையை வெளிப்படுத்தியபடி, ஒரு தொகுதி படைப்பாளிகள் குழுவிலிருந்து வெளியேறியுள்ளனர். தமிழ்தேசிய கருத்துக்களை பேசுவதற்கு அரச ஆதரவாளர்கள் இடமளிக்கவில்லையென்பதும் அவர்களின் குற்றசாட்டுகளில் ஒன்று.

படைப்பாளிகள் தமது அனுபவங்களை எழுதுவதும் பேசுவதும் இலங்கையின் நிலவரங்களை பொறுத்தது. யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நடத்தப்பட்ட எழுத்தாளர் விழாக்கள் எல்லாமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவைதான்.

இலங்கையர்களினால் நடத்தப்பட்டவையல்ல. இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு வெளியிலிருந்து வருவதை அடியோடு நிராகரிக்கும் இலங்கையரசு, தமிழர்கள் இயல்பாக வாழ்கிறார்கள் என்பதை காட்டுவதற்கான விழாக்களை மட்டும் இறக்குமதி செய்வது வேடிக்கையானது.

யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த கலை இலக்கிய விழாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆளுமைகளின் பங்களிப்பை கோராததன் மூலமும், உள்நோக்கமுடைய சந்திப்பென்பதனை புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே, அரசின் திரைமறைவிலான இந்த முயற்சிகளை முறியடிப்பது ஒவ்வொரு படைப்பாளிகளினதும் வரலாற்று கடமை. போராட்டமென்பது களங்களிற்கு செல்வது மட்டுமல்ல.

சில இடங்களிற்கு செல்லாமலிருப்பதும்தான். ஆகவே, இந்த நிகழ்வை தமிழ்பேசும் மலையக மற்றும் முஸ்லீம் படைப்பாளிகளையும் புறக்கணிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts