40ஆயிரம் ஏக்கர் வயல்களைப் பாதுகாக்க 25 குழாய்க் கிணறுகளை அமைக்கத் திட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோகத்தில் செய்கைபண்ணப்பட்ட 60 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையில் அழிவை எதிர்கொள்ளும் 40 ஆயிரம் நெல்லை பாதுகாக்க நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் உடனடியாக 25 குழாய் கிணறுகளை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள 60 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையில் சுமார் 20 ஆயிரம் நெல்லுக்கு ஓரளவு நீர்ப்பாசன வசதியினை ஏற்படுத்தக்கூடிய வாய்புக்கள் உள்ளபோதிலும் ஏனையவை அழிவினை எதிர்நோக்குகின்றன. குறிப்பாக இரணைமடுவின் ஒரு பகுதி, கல்மடுக்குளம், அக்கராயன் குளம் ஆகியவற்றினில் தேக்கப்பட்ட நீர்கள் பாச்சலுக்காக விடப்பட்டுள்ளமையினால் சுமார் 20 ஆயிரம் நெற்பயிர்களை மட்டுமே பாதுகாக்க முடியும் ஏனையவை அழிவின் விளிம்பில் உள்ளது.

இவ்வாறு அழிவடையும் நெல் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து இதனை ஆராய்ந்த நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் இபாட் திட்ட உதவியில் குறித்த விவசாயிகளின் விளை நிலத்தினை அழிவில் இருந்து பாதுகாக்கவும் எதிர்காலத்தில் இவ்வாறான நெருக்கடி ஏற்படின் உதவும் முகமாகவும் உடனடியாக குழாய் கிணறுகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 21 கமக்கார அமைப்புக்களின் பிரதேசத்தில் இரு அமைப்புக்களின் பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் இராமநாதபுரம் பகுதியில் இன்று முதல் 25 குழாய் கிணறுகளை அமைக்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் முன்வந்துள்ளனர். இருப்பினும் இதற்கான இயந்திரங்களை உடனடியாக பெற்றுக் கொள்வதில் திணைக்களத்தினர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவ்வாறு 25 குழாய் கிணறுகள் அமைக்கும் சந்தர்ப்பத்தினில் ஏறக்குறைய மேலும் ஓர் ஆயிரம் ஏக்கர் வயல்நிலங்களை பாதுகாக்க முடியும் என பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Related Posts