Ad Widget

30 வருடங்களின் பின்னர் பாலைதீவு, இரணைதீவுப் பகுதிகளில் கடற்றொழில் செய்வதற்கு அனுமதி

fishermenமுப்பத்தைந்து வருடகால இடைவெளியின் பின்னர் மீண்டும் பாலைதீவு, இரணைதீவுப் பகுதிகளில் மீன் பிடிப்பதற்கான அனுமதியை கடற்படையினர் மீனவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

பொன்னாலை கடற்படை முகாமில் கடற்படைகளின் வடமாகாண கட்டளை அதிகாரி அட்மிரல் உடவத்த, உதவிக்கட்டளை அதிகாரி கொமாண்டர் ஜீ.டி.எஸ்.விமல துங்க,கப்டன் அபேரத்ன உட்பட யாழ். மாவட்ட கடற்படை முகாம்களின் கட்டளை அதிகாரிகள், ஏனைய அதிகாரிகளுக்கும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் பிரதிநிதிகளும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், பாலைதீவு, கற்கடதீவு மற்றும் இரணைதீவு ஆகிய பகுதிகளில் தொழில் செய்வதற்கு தம்மை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இதனை உடனடியாக கருத்திற் கொண்டு ஆய்வு செய்த கடற்படை அதிகாரிகள், பாலைதீவு மற்றும் இரணைதீவுப் பகுதிகளில் தொழில் செய்வதற்கு உடனடியாக அனுமதிப்பதாகவும் குறிப்பிட்ட தீவுகள் இரண்டிலும் தங்கி நின்று தொழில் புரிபவர்கள் கடற்றொழில் திணைக்களத்தின் அடையாள அட்டையுடன் கடற்றொழில் திணைக்கள அதிகாரியின் உறுதிப்படுத்தலையும் பெற்றுக் கொண்டு வந்து தொழில் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டனர்.

இவ்வாறு பாலைதீவு மற்றும் இரணைதீவுப் பகுதிகளில் தங்கி நின்று தொழில் செய்பவர்கள் தமது தங்கும் இடங்களை கடற்படையினரின் முகாம்களுக்கு அண்மையாக அமைப்பார்களாக இருந்தால் கடற்றொழிலாளர்களுக்கு வேண்டிய உதவிகளையும் கடற்படையினர் செய்யக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

இதேவேளை, தென்னிலங்கையில் இருந்து வந்து சிலிண்டர்களுடன் கடலட்டை பிடிப்பவர்களினால் வட மாகாண கடற்றொழிலாளர்கள் கடுமையாக பாதிப்படைவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொள்ள வேண்டும் எனவும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளால் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், மன்னார் கடல் பகுதிகளில் இந்நட வடிக்கைகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதனால் கடலட்டையின் பெருக்கம் பெருமளவில் பாதிப்படைந்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்தக் கோரிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த கடற்படை அதிகாரிகள், கடலட்டை பிடிப்பதனை தடை செய்வதற்கான அதிகாரம் தமக்கு கிடையாது எனவும் இதனை மீன்பிடித் திணைக்கள அலுவலர்கள் மூலம் கடற்றொழில் அமைச்சுடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

கடற்றொழில் அமைச்சில் இருந்து உரிய அனுமதியை பெற்று தென்னிலங்கையில் இருந்து வரும் கடற்றொழிலாளர்கள் தொழில் செய்வதை தடை செய்ய முடியாது எனவும் கடற்படை அதிகாரிகள் இதன் போது குறிப்பிட்டனர்.

Related Posts