30 வருடகால இருண்ட யுகத்தை இல்லாதொழித்து வடக்கு மக்களின் சுதந்திரத்தையும்,உரிமைகளையும் மீளப்பெற்றுக்கொடுத்துள்ளோம் – யாழில் பிரதமர்

வடக்கு மாகாணத்தில் காணப்பட்ட 30 வருடகால இருண்ட யுகத்தை இல்லாதொழித்து வடக்கு மக்களின் சுதந்திரத்தையும்,உரிமைகளையும் மீளப்பெற்றுக்கொடுத்துள்ளோம்.

வடக்கிற்கும்,தெற்கிற்கும் இடையிலான பாலமாக யாழ்தேவி புகையிரதத்தை கருதுகிறேன்.

எமது ஆட்சியில் இரு மாகாணங்களுக்குமிடையிலான நல்லுறவு அபிவிருத்தி ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

200 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணம் மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலைய திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

யாழ்ப்பாண மக்களுடன் உரையாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.யாழ் மாவட்டத்தின் 30வருடகால சம்பவங்களை நன்கு அறிந்துள்ளேன்.

1970ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ் மாவட்டத்தின் நிலைமை நினைவில் உள்ளது.

அக்காலப்பகுதியில் யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும்,கொழும்பு வாழ் மக்கள் மத்தியிலும் நல்லுறவு காணப்பட்டது.

யாழ்ப்பாண நகரங்களில் சிங்கள முதலாளிமார்களும் இருந்தார்கள்.கொழும்பில் மாத்திரமல்ல மாத்தறை முதலாளிமார்களும் யாழ்ப்பாண நகரில் வெதுப்பகங்களை வைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்தார்கள்.

அக்காலப்பகுதியில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் போது விவசாயிகளும்,பெண்களும் அமோகமாக வரவேற்றார்கள்.

யாழ் மக்களுக்கும்,தெற்கு மக்களுக்கும் இடையிலான நல்லுறவு 1980ஆம் ஆண்டளவில் இருண்ட யுகத்திற்கு தள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு செல்லும் புகையிரத பாதை உடைக்கப்பட்டது.தெற்கிலிருந்து வடக்குக்கு செல்லும் யாழ்தேவி புகையிரத சேவை நிறுத்தப்பட்டது.வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான நல்லுறவின் பாலமாக நான் யாழ் தேவியை கருதுகிறேன்.

1980 ஆம் ஆண்டுக்கு பிறகு வடக்கு மக்களின் சுதந்திரம் முடக்கப்பட்டது.விவசாயிகள் விவசாய நிலங்களுக்கும், மீனவர்கள் கடற்றொழிலுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வடக்கு பதுங்கு குழியாக்கப்பட்டது.

தமக்கு சொந்தமான இடத்தில் வாழும் உரிமை மறுக்கப்பட்டது.மக்கள் தங்களின் உடமைகளை இழந்து நெருக்கடிக்குள்ளானார்கள்.

வடக்கு மக்கள் அகதிகளாக ஒவ்வொரு இடங்களுக்கும் செல்ல வேண்டிய நிலைமை தோற்றம் பெற்றது.

ஆரம்ப காலத்தில் இந்தியாவிற்கும்,ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றார்கள்.பல நாடுகளில் புகழிடம் கோர வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

நாட்டில் 30வருடம் இருண்ட யுகம் காணப்பட்டது.வடக்கு மக்களின் வாழ்க்கையும், அபிவிருத்தியும் இருண்ட யுகத்திற்குள் தள்ளப்பட்டது.

2019ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி அந்த இருண்ட யுகத்தை முழுமையாக இல்லாதொழிக்க எம்மால் முடிந்தது.இருண்ட யுகத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களை தவிர ஏனைய அனைத்தையும் வடக்கு மக்களுக்கு வழங்கியுள்ளோம்.

வடக்கின் தற்போதைய அபிவிருத்திகள் யுத்தம் முடிவடைந்தபோது காண முடியவில்லை.

இடிந்த கட்டிடங்கள்,உடைந்த வீதிகள்,உள்ளிட்ட யுத்த சுவடுகளை மாத்திரம் காண முடிந்தது.இரண்டு வருட காலத்திற்குள் வடக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்தோம்.

வடக்கு மக்கள் உணவு உண்பதற்கும்,பல் துலக்குவதற்கும் மாத்திரம் வாய் திறப்பார்கள் என்ற வழக்கு அக்காலப்பகுதியில் காணப்பட்டது.நாங்கள் அதனை மாற்றியமைத்து அவர்களுக்கான சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தோம்.

வடக்கு மாகாணத்தில் நாம் மேற்கொண்ட அபிவிருத்தி பணிகள் 2015ஆம் ஆண்டுக்கு பிறகு இடைநிறுத்தப்பட்டது.நல்லிணக்கம் பேச்சளவில் மாத்திரம் செயற்படுத்தப்பட்டது.

நல்லாட்சி காலத்தில் வடக்கு மாகாணமும் அபிவிருத்தியடையவில்லை நாடும் அபிவிருத்தியடையவில்லை.இருப்பினும் நல்லிணக்கம் என்ற பெயரில் பல பில்லியன் நிதி செலவிடப்பட்டது.

கொவிட் -19 பெருந்தொற்று தாக்கத்தின் மத்தியில் நாட்டின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.கொவிட் தாக்கத்திலிருந்து நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாத்துள்ளோம் என்றார்.

Related Posts